ஒரு மிகப்பெரும் செல்வந்தர் கையில் விலையுயர்ந்த வைரமோதிரம் அணிந்திருந்தார். அந்த மோதிரத்தில் உள்ள கற்கள் எல்லாம் மதிப்பு மிகுந்த உயர்ரகக்கற்கள்.
விருந்து ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது, அந்த மோதிரத்திலிருந்து ஒரு கல் கழன்று விழுந்துவிட்டது.
அவரும் அதைக் கவனிக்காமல் வீடு திரும்பிவிட்டார்.
கீழே விழுந்த கல்லை யாரும் கவனிக்கவில்லை.
அந்தக் கல் பலரால் மிதிபட்டது. அதன் மீது குப்பைகள் கொட்டப்பட்டது. அதை வாரி ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் போட்டார்.
அங்கு உள்ள கழிவுகளுக்கு மத்தியில் வருத்தத்துடன் இருந்தது அந்த வைரக்கல்.
“நான் எவ்வளவு உயர்ந்தவன் என் ரகமென்ன, என் விலையென்ன, என் தரம் என்ன, என் அந்தஸ்து என்ன, இப்படி குப்பைக்குள் வந்து கிடக்கிறேனே"என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது குப்பையைக் கிளறி இரை தேட வந்தது ஒரு கோழி.
கோழியை பார்த்ததும் வைரக்கல்லுக்கு சந்தோஷம். இந்தக் கோழியின் கண்ணில் பட்டுவிட்டால், இந்த துர்நாற்றம் பிடித்த குப்பைத்தொட்டியிலிருந்து விடுதலை கிடைத்து விடும். “இறைவா! இந்தக் கோழியின் கண்ணில் என்னை பார்க்குமாறு செய்” என வேண்டிக் கொண்டது.
அது எதிர்பார்த்தது போலவே கோழி குப்பையை கிளறக்கிளற மேலிருக்கும் கழிவுகள் நீக்கப்பட்டு பளீரென மின்னியது வைரக்கல்.
திடீர் பிரகாசத்தை கண்டு கோழி பின் வாங்க வைரக்கல், "கோழியே நான் விலையுயர்ந்த வைரம், மிகுந்த ராசியுடையவன், உயர் தரமுடையவன் என்னை உன் சொந்தமாக்கிக் கொள். உனக்கு இது நல்ல சந்தர்ப்பம்” என்றது.
கோழி அமைதியாகச் சொன்னது.
“எனக்கு ஒரு சிறு புழுவோ, சிறு அரிசியோ கிடைத்தால் பசியாறுவேன். உன்னை வைத்து என்ன செய்வது...? நீ மனிதர்கள் கண்ணில் பட்டால் பயனடைவாய்... உன்னால் எனக்கு எந்தப் பயனுமில்லை... என் பசிக்கு இரைதேட வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் குப்பையைக் கிளறத் தொடங்கியது.