அது ஒரு மடாலயம். அதன் தலைவராக இருந்த குரு, மிகவும் அமைதியான ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய சீடர்கள், ஆன்மிக அறிவைப் பெறுவதற்காகச் சேர்ந்திருந்தனர்.
அதில் ஒரு சீடன், சமீபத்தில்தான் சேர்ந்திருந்தான். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவனது ஆர்வமும், அதற்காக அவன் கேட்கும் கேள்விகளும், குருவுக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு புண்ணிய நாளில் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தார்கள். அந்த வழிபாட்டின் முடிவில் குருவிடம் வந்த சீடன், “குருவே... நாம் படைக்கும் நைவேத்தியத்தை இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால், நாம் பிறருக்கு எப்படிப் பிரசாதமாக அந்த நைவேத்தியத்தை வழங்க முடியும்? கடவுள், நாம் படைக்கும் நைவேத்தியத்தைச் சாப்பிடுகிறார் என்றால், அது குறையவில்லையே?” என்று கேட்டான்.
ஆனால், அப்போது அவனுக்குக் குரு பதில் சொல்லவில்லை. மாறாக, “ஆன்மிக வகுப்புக்கு நேரமாகிவிட்டது. வகுப்பறையைத் தயார் செய்து, மற்ற சீடர்களை அமரச் செய். அதற்குள் நான் வந்துவிடுகிறேன்” என்றார்.
தன் கேள்விக்கு பதில் கிடைக்காத வருத்தம் இருந்தாலும், குருவின் சொல்லைத் தட்டக்கூடாது என்பதற்காக அவர் சொன்னதைச் செய்யச் சென்று விட்டான். ஆன்மிக வகுப்பு தொடங்கிவிட்டது. இறைவனை வழிபடுவதற்கான ஒரு மந்திரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார், குரு. அதை தங்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து, அனைத்துச் சீடர்களும் வாசித்தனர். பின்னர் மனப்பாடம் செய்யத் தொடங்கினர்.
இப்போது தன்னிடம் நைவேத்தியம் பற்றிய சந்தேகம் கேட்ட சீடனை, தன் அருகில் வரும்படி அழைத்தார் குரு.
அவனும் குருவின் அருகில் சென்று நின்றான். அவனிடம், “என் அன்புக்குரிய சீடனே... இப்போது நான் கூறிய மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அந்த சீடன், “முழுமையாக என்னுடைய மனதில் உள்வாங்கிக் கொண்டேன் குருவே” என்றான்.
“எங்கே ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொல் பார்ப்போம்...” என்று குரு கேட்க, கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்தியவன் கணீர் குரலில் அந்த மந்திரத்தை ஒப்புவித்து முடித்தான்.
குரு மென்மையான சிரிப்புடன், “நீ மந்திரத்தைச் சரியாக மனதில் நிறுத்தியதாகத் தெரியவில்லையே...” என்றார்.
பதறிப்போனான் சீடன். “குருவே... நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால், புத்தகத்தில் இருப்பதைப் போலவேதான், நான் இப்போது கூறினேன்” என்று கூறிப் புத்தகத்தைக் காண்பித்தான்.
அதை கையில் வாங்கிய குரு, “இந்தப் புத்தகத்தில் இருந்து படித்துத்தான் மனதில் உள்வாங்கினாயா? இதிலிருந்துதான் உள்வாங்கினாய் என்றால், மந்திரம் புத்தகத்திலும் இருக்கிறதே. நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக்கொண்டாய் என்றால், புத்தகத்தில் அது இருக்கக் கூடாது அல்லவா?” என்றார்.
குருவின் கேள்வியில், அந்தச் சீடன் குழம்பிப் போனான்.
சிறிய புன்னகையுடன் குரு தொடர்ந்தார். “நீ கேட்ட நைவேத்தியக் கேள்விக்கு பதில் இங்கேதான் இருக்கிறது. கவனமாகக் கேள். புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம் (கண்ணுக்கு புலப்படும் உருவம்) ஆனது. ஆனால், அதில் இருந்து உள் வாங்கிய மந்திரம் உன்னுடைய மனதில் பதிந்து உன் நினைவில் சூட்சும வடிவில் (உருவமில்லாதது) இருக்கிறது. அது போலவே இறைவன், சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியம் ஸ்தூல வடிவமாக இருந்தாலும், அதை இறைவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின்னரும் புத்தகத்தில் உள்ள மந்திரம் அளவில் குறையாதது போலவே, இறைவன் உட்கொள்ளும் நைவேத்தியமும் அளவில் குறையாமல் இருக்கிறது. ஸ்தூலமாக இருக்கும் நாம், ஸ்தூலமாகவும்; சூட்சுமமாக இருக்கும் இறைவன், சூட்சுமமாகவும் நைவேத்தியத்தைச் சாப்பிடுகிறோம். இப்போது புரிந்ததா?” என்று முடித்தார் குரு.
தனக்கு அனைத்தும் அற்புதமாக விளங்கியதை சொல்லும் வகையில், குருவின் பாதம் பணிந்து வணங்கினான், சீடன்.