காட்டில் ஒருநாள் யானையை வேட்டையாட வெட்டிவைத்த பள்ளத்தில் ஒரு ஓநாய் விழுந்து விட்டது..! எம்பிக் குதித்துப் பார்த்தும் தப்பிக்க வழியில்லாத ஓநாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது. அந்தக் குரல் கேட்டு சிறிய யானை ஒன்று வந்து பள்ளத்தில் எட்டிப் பார்த்தது.
ஓநாய் நண்பனே... பள்ளத்தில் உன்னை யாரும் தள்ளிவிட்டார்களா? அல்லது தவறி விழுந்து விட்டாயா? எனக் கேட்டது யானை. சட்டென யோசித்த ஓநாய் யானையண்ணே.! என்னை யாரும் தள்ளியும் விடலை தவறியும் விழவில்லை, நானாகத்தான் குதிச்சேன் என்றது...!
“நீயாக குதித்தாயா... ஏன்...?” என்று கேட்டது யானை.
அதற்கு ஓநாய், "இது போலப் பள்ளத்தில் தானாக வந்து எந்த மிருகம் குதிக்கிறதோ, அந்த மிருகத்துக்கு அபூர்வ சக்தி கிடைக்குமாம். இங்கு இரு முனிவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன், உடனேக் குதித்து விட்டேன் என்றது.
“அப்படியா? அபூர்வ சக்தி ஏதும் உனக்கு கிடைத்ததா...? என்று யானை கேட்க, “இல்லை, அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம்... உனக்கும் அது வேண்டுமானல் நீயும் குதியேன் என்றது ஓநாய்... எதுவும் யோசிக்காமல் மறுபேச்சின்றி யானையும் அக்குழிக்குள் குதித்தது.
ஒரு மணிநேரம் ஆயிற்று...! என்ன ஓநாயே? ஒன்றும் நடக்கவில்லையே என யானை கேட்க, “அது தான் எனக்கும் தெரியவில்லை, ஒன்று செய் நீ சற்று அமர்ந்து கொள் நான் உன் முதுகில் ஏறி வெளியேப் போய் அந்த முனிவர்களைக் கேட்டு வருகிறேன்" என்றது ஓநாய்.
“நீ வெளியேறிவிட்டால் நான் எப்படி மேலே வருவது?” என யானை கேட்க, “அதெல்லாம் நான் உதவுகிறேன், நீ இப்போது உதவு” என்றது ஓநாய்.
அதன் பேச்சை நம்பிக் குனிந்த யானையின் முதுகில் தாவி அது நிமிர்ந்ததும் பள்ளத்தை விட்டு வெளியே குதித்தது ஓநாய்.
ஓநாய், "சரிப்பா நான் கிளம்புறேன்” என்று யானையிடம் சொல்ல, “நண்பா உதவிக்கு ஆள் அழைத்து வருவாயல்லவா” என்று யானை கேட்டது.
“முட்டாள் யானையே, உன்னை எப்படிக் காப்பாற்றுவது? இதை நீ குதிப்பதற்கு முன் யோசித்திருக்கணும்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து ஓடி மறைந்தது.