பேராசை பிடித்த குதிரை வியாபாரி ஒருவன் இருந்தான்.
அவன் ஒரு நாள் குதிரைச் சந்தைக்குப் போய் குதிரைகளை விற்று விட்டு வீடு திரும்பும் போது, அவனைப் பின் தொடர்ந்தது எங்கிருந்தோ தப்பி ஓடி வந்த குதிரை ஒன்று.
குதிரை வியாபாரி, “இந்தக் குதிரை யாருடையதோ, ஊர் எல்லையைத் தாண்டிய பின்னும் இக்குதிரை நம் பின் வந்தால் இதை எப்படியாவது நம் வீட்டுக்குக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தான். அதேப் போல குதிரையும் அவனை எல்லையைத் தாண்டியும் பின் தொடர்ந்தது.
சந்தோஷமடைந்த அவன் தன் யுக்திகளால் அதற்குக் கடிவாளமிட்டு, தன்னுடைய குதிரைகளை விற்றப் பணம் உட்பட எல்லாப் பொருட்களையும் அதன் மீது ஏற்றினான். அப்போது, அவ்வழியே வந்த வழிப்போக்கன் குதிரையைப் பார்த்து, “ஐயா, இந்தக் குதிரை விலை என்ன?” என்றான்.
மனதிற்குள் குதூகலமடைந்த வியாபாரி, பேராசையுடன் பெரும் விலை சொன்னான்.
அதைக் கேட்ட வழிப்போக்கன். "ஐயா, நான் அருகிலிருக்கும் ஊருக்குத்தான் போகிறேன். என் மாமா அங்கு பெரும் செல்வந்தர். அவரிடம் நீ கேட்டத் தொகையை வாங்கித் தருகிறேன்” என்றான்.
அந்த ஊர்தான் குதிரை வியாபாரி ஊர்.
"சரி அங்கு வந்து பணம் தா. ஆனால், அங்கு வந்த பின், விலையில் ஒரு பைசா கூட குறைக்கமாட்டேன் சம்மதமா?” என்றான் வியாபாரி.
வழிப்போக்கனும் சரி எனச் சொல்ல... வியாபாரிக்கு மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி..!
“ஓசியில் கிடைத்த இந்தக் குதிரை யாருடையதோ, ஆனால் நமக்கு பெரும் லாபம்...” என்று எண்ணினான்.
சிறிது நேரத்தில் சற்று ஓய்வுக்காக ஒரு ஆற்றங்கரையில் நின்றார்கள்.
குதிரையைக் கரையில் ஒரு கல்லில் கட்டிவிட்டு ஆற்றில் சுகமாகக் குளித்தான் வியாபாரி.
குளித்துவிட்டு வந்து பார்க்கும் போது நின்ற குதிரையின் நிழலில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தான் வழிப்போக்கன்.
பேராசை பிடித்த வியாபாரிக்கு இப்போது ஒரு யோசனை உதித்தது. மெல்லக் குதிரையை அவிழ்த்துவிட்டு வழிப்போக்கனை எழுப்பினான்.
எழுந்த வழிப்போக்கன், “போகலாமா ஐயா...?” என்றான்.
“அதெல்லாம் போகலாம் அதற்கு முன் குதிரை விலையில் ஒரு மாற்றம்” என்றான் வியாபாரி.
“எதற்கு ஐயா இந்தத் திடீர் மாற்றம்...?”
“நான் உனக்குக் குதிரையின் விலைதான் சொன்னேன். குதிரையின் நிழலுக்கு அல்ல...! ஆகவே, அதைப் பயன்படுத்தியதற்காக அதற்கும் ஒரு விலை நீ தர வேண்டும்” என்றான் வியாபாரி.
கோபமடைந்த வழிப்போக்கன், “ஐயா... இது அநியாயம்! குதிரை நிழலுக்கு விலை என்பது இதுவரை நான் கேள்விப்படாதது... நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள்” என்று சத்தம் போடத் தொடங்கினான்.
“உன்னைப் போன்ற கயவனுக்கு என் குதிரை விற்பனைக்கு அல்ல... மரியாதையாக குதிரை நிழலுக்கு பணம் தா” என்று வியாபாரி கூச்சலிட அவர்களுக்குள் சண்டை நடந்தது...
இந்த இடைவெளியில் அந்தக் குதிரை வியாபாரியின் பொருளுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
பேராசைப்பட்ட குதிரை வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் என்றபடி வழிப்போக்கன் அங்கிருந்து சென்றான்.