புகழும் பணிவும் ஒரிடத்தில் சந்தித்து கொண்டன.
புகழ் சொன்னது, "என்னப்பா பணிவு, நீ இருக்குற இடமே தெரியலை... என்னைப் பார்த்தாயா? எங்கு பார்த்தாலும் என் பேச்சுதான்"
அதற்குப் பணிவு, “எனக்குத்தான் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எதுவும் பிடிக்காதே” என்றது.
“இப்படிப் பணிஞ்சு போயி என்னத்த கண்ட... நாலு பேரு பாராட்டுற மாதிரி இருந்தாத்தானே ஊருக்கு உன்னைத் தெரியும். இப்படி பம்மிக் கொண்டிருக்கறதால, உன்னை யாருக்கும் தெரியலை, எனக்கு இருக்குற பெருமை உனக்கு இருக்கா...?” எனக் கேட்டது புகழ்.
"ஒரு பெருமை இருக்கு... உன் மனம் புண்படாவிட்டால் சொல்லவா? என்றது பணிவு.
“புகழும் சரி” என தலையசைக்கப் பணிவு சொன்னது.
"அதாவது ஒருவன் புகழால் கர்வமாக நடந்து கொண்டால் மக்கள் எல்லாம் ‘புகழ் வந்த திமிரு’ என்று உன்னைத்தான் திட்டுவார்கள். அதற்குப் பிறகு தான் அம்மனிதனைத் திட்டுவார்கள்...”
சட்டென்று புகழ்,"சரி, பணிவாக இருப்பவர்கள் கர்வமாக நடந்து கொண்டால் திட்டமாட்டார்களா?" என்றது.
பணிவு அமைதியாகச் சொன்னது.
“ஆம் அப்போதும் திட்டுவார்கள்... ஆனால் என்ன சொல்லி...? நல்லா பணிவான குணம் இருந்தவன் தான்... இப்ப அந்தப் பணிவு போயிடுச்சு. அதுதான் இந்தத் திமிரு... அதாவது நீ வந்தாலும், நான் போனாலும் ஒரு மனிதன் இகழப்படுவான்... இந்த ஒரு பெருமை எனக்குப் போதும்"
அதைக் கேட்டதும் புகழ் தலை குனிந்தது.