மரத்தின் மீது ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. அப்பக்கமாக ஒரு குள்ள நரி வந்தது.
“வணக்கம், நண்பனே. உன் குரலைக் கேட்டதும், உன்னைக் காண ஓடோடி வந்தேன்” என்றது குள்ள நரி.
“உன் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” என்றது குருவி.
ஆனால், அதைக் கேட்காதது போல் பாவனை செய்தது குள்ள நரி.
“நீ என்ன கூறுகிறாய்? எனக்குக் கேட்கவே இல்லை. இங்கே வா. கீழே இறங்கி வா. உன்னோடு பேச எனக்கு ஆசை. நீயோ மரத்திலிருந்து பேசுகிறாய் நீ பேசுவது என் காதில் விழவே இல்லை” என்றது குள்ளநரி.
“ஐயோ, தரைக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைப் போன்ற பறவைகள் தரைக்கு வருவது ஆபத்தானது” என்றது குருவி.
“எனக்கா நீ பயப்படுகிறாய்?” என்று வியப்புடன் கேட்டது குள்ளநரி.
“உன்னிடம் பயம் இல்லை, ஆனால் இதர மிருகங்கள் உள்ளனவே...” என்றது குருவி.
“நண்பனே, பயப்படாதே. சமீபத்தில்தான் உலகில் சமாதானம் நிலவ வேண்டும் என்று சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே, இனிமேல் மிருகங்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளாது. ஆகவே நீ பயப்படத் தேவையில்லை” என்றது நரி.
“அப்படியா! அது நல்லதுதான். அதோ பார், நாய்கள் இப்பக்கமாக ஒடி வருகின்றன. அவற்றைப் பார்த்து ஒட வேண்டிய அவசியமில்லை... நீ இங்கேயே இருக்கலாம்” என்றது குருவி.
“நாய்கள்” என்ற வார்த்தையைக் கேட்டவுடனேக் குள்ளநரி ஒட்டம் பிடிக்கத் தொடங்கியது.
“நரியே, நீ எங்கே ஒடுகிறாய்? உலகில் அமைதி நிலவ வேண்டும் என்ற சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே. பின் ஏன் பயந்து ஒடுகிறாய்? அந்த நாய்கள் உன்னைத் தொடாது” என்றது குருவி.
“யாருக்குத் தெரியும்? அந்த அறிவிப்பை நாய்கள் இன்னும் அறிந்திருக்காமல் இருக்கலாம்...” என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது குள்ளநரி.