ஈ ஒன்று மனிதனிடம் சென்று அவனைப் புகழ்ந்துப் பேசி, தனக்கு ஒரு வால் வேண்டும் என்று கேட்டது.
“வாலுள்ள மிருகங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன? எனவே, எனக்கும் ஒரு வால் வேண்டும்...” என்று அது சொல்லியது.
மனிதன் என்ன சொல்லியும், ஈ கேட்க வில்லை; பிடிவாதமாக வால் வேண்டும் என்று நச்சரித்தது.
“சரி, காடு, நதி, வயல் முதலிய எல்லா இடத்திற்கும் பறந்து செல், அங்குள்ள பறவைகள், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அழகுக்காக மட்டும், வால் வைத்திருக்கிறது என்றால், என்னிடம் வந்து சொல் உனக்குக் கண்டிப்பாக நான் வால் செய்து தருகிறேன்”என்றான் மனிதன்.
முதலில் ஈ நதியை நோக்கிச் சென்றது. அதில் வாலுடன் நீங்திக் கொண்டிருந்த மீனைப் பார்த்து, “மீனே, எனக்கு உன் வாலைத் தாயேன். அழகுக்காகத்தானே அதை வைத்திருக்கிறாய்” என்றது ஈ.
"இல்லவே இல்லை. நான் பக்கவாட்டில் திரும்ப வேண்டும் என்றால், இந்த வாலின் உதவியால்தான் முடிகிறது. வால் எனக்கு மிகவும் தேவையான ஒன்று. உனக்குக் கொடுக்க இயலாது" என்று பதிலளித்தது மீன்.
அடுத்து ஈ காட்டை நோக்கிப் பறந்தது, அங்கு ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த மரங்கொத்திப் பறவையைப் பார்த்து, "மரங்கொத்திப் பறவையே, உன்னுடைய வால் அழகுக்காகத்தானே இருக்கிறது. அதை எனக்குக் கொடுக்க மாட்டாயா?" என்று கேட்டது.
"நீ என்ன சொல்கிறாய்? முட்டாள்தனமாக இருக்கிறதே. நான் மரத்தைக் கொத்துவதைப் பார்" என்று கூறி, மரங்கொத்தி தன்னுடைய வாலை மரப் பட்டையின் மீது முட்டுக் கொடுத்தது. பிறகு தன் உடல் முழுவதையும் வளைத்து, கிளையின் மீது மிகப் பலமாகத் தனது அலகினால் கொத்தியது. அப்பொழுது மரப்பட்டையிலிருந்து துகள்கள் தெறித்தன.
அதனைக் கண்ட ஈ, வால் இல்லாமல் மரங்கொத்தி வாழ முடியாது என்று எண்ணியது. தன் பயணத்தை மேலும் தொடர்ந்தது.
காட்டில் ஒரு புதருக்கு இடையில் பெண் மான் அழகான, மிருதுவான, வெண்மையான சிறிய வாலுடன் நின்று கொண்டிருப்பதை ஈ கண்டது. அதன் வாலைத் தரும்படி அந்த ஈ கேட்டது.
“நீ எப்படி என் வாலைக் கேட்கிறாய்? நான் என் வாலைக் கொடுத்து விட்டால் என் குட்டி இறந்து விடும்” என்றது அச்சத்துடன் மான்.
“உன் வாலுக்கும், உன் குட்டிக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டது ஈ.
“சரி, ஒரு ஓநாய் எங்களை விரட்டிக் கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம். நான் உடனே ஒடிப்போய் அடர்ந்த மரங்களுக்கு இடையே என்னை மறைத்துக் கொள்வேன். மரங்களின் இடையே என்னை யாரும் கண்டு பிடிக்க முடியாது. எனவே நான் என் சிறிய வாலை மட்டும் கைக்குட்டையை போல் ஆட்டி அசைத்து "இந்தப் பக்கம்" என்று சமிக்ஞை செய்வேன். என் குட்டி அதை பார்த்துப் புரிந்து கொண்டு என்னைத் தொடரும். இப்படித்தான் நாங்கள் ஒநாயிடமிருந்து தப்பித்துக் கொள்கிறோம்” என்றது மான்.
அங்கிருந்து பறந்து போன ஈ, வழியிலே ஒரு நரியைப் பார்த்தது. அதன் அழகான வாலைப் பார்த்து, “எனக்குத் தரமாட்டாயா?” என்று கேட்டது.
“என்னால் கொடுக்க முடியாது; வால் இல்லாவிட்டால் வேட்டை நாய்களிடமிருந்து எங்களால் தப்பிக்க முடியாது. அவை எங்களை எளிதில் பிடித்து விடும்” என்றது நரி.
“அது எப்படி?” என்று கேட்டது ஈ.
“நாய், என்னைப் பிடிக்க வந்தால் என் வாலை ஒரு புறமும், உடலை ஒரு புறமும் திருப்புகிறேன். நாய் என் வாலைப் பார்த்து பின் தொடரும் பொழுது, நான் வேறு திசையில் ஒடி விடுகிறேன்” என்று நரி சொன்னது.
எல்லா மிருகங்களுக்கும் வால் அவசியம் என்பதை ஈ உணர்ந்தது. இருப்பினும் வீட்டிற்கு வந்து மறுபடியும் அதைப் பற்றிச் சிந்தித்தது.
மனிதனிடம் சென்று தொந்தரவு செய்து, எப்படியாவது வாலை வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.
அந்த மனிதன் வீட்டில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஈ, ஜன்னல் வழியாக அங்கு சென்று நேராக அவனது மூக்கின் மேல் உட்கார்ந்தது.
மனிதன் மூக்கின் மீது ஒரு தட்டுத் தட்டியதும், ஈ அவனுடைய புருவத்துக்குத் தாவியது. புருவத்தில் தட்டியதும் மூக்குக்கு வந்தது.
“உனக்குப் புண்ணியம் உண்டு. என்னைத் தனியாக இருக்க விடேன். தொந்தரவு செய்யாமல் இருக்க் மாட்டாயா?” என்றான் மனிதன்.
“நான் சும்மா இருக்க மாட்டேன். நீதான் என்னைக் கேலிப் பொருளாக்கினாய். நீ ஏன் என்னை வாலைத் தேடி வரும்படி அனுப்பினாய்? நான் எல்லா மிருகங்களையும் கேட்டேன். அவை அனைத்துக்கும் வால் அவசியமாம்” என்று ஈ கூறியது.
ஈயிடமிருந்து எளிதில் தப்ப முடியாது என்று எண்ணிய மனிதன், சற்று யோசித்து விட்டுக் கூறினான்.
“அதோ பார், அங்கே ஒரு பசு இருக்கிறது. அதனிடம் சென்று எதற்காக வாலை வைத்திருக்கிறது என்று கேட்டு வா” என்றான்.
“சரி நான் போய் கேட்பேன். பசு தன் வாலைக் கொடுக்காவிட்டால், உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்றது ஈ.
உடனே ஈ ஜன்னலின் வழியாக வெளியேச் சென்று, பசுவின் மீது உட்கார்ந்து,“பசுவே, பசுவே உனக்கு வால் எதற்கு?” என்று கேட்டது.
பசு பதில் ஒன்றும் கூறவில்லை. மாறாகத் தன்னுடைய வாலால் ஈயின் மீது ஒரு அடி அடித்தது.
அவ்வளவு தான். ஈ பொத்தென்று தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதன்.
“ஆம். இப்பொழுது உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இனிமேலாவது மனிதர்களையும், மிருகங்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்து” என்றான்.