மன்னர் ஒருவர் மக்களுக்கு சிறந்த ஆட்சியாளராக இருந்தார். பல்கலைகளிலும் சிறந்து விளங்கினார். மக்களுக்கு அவரின் ஆட்சிக்காலம் பொற்காலமாக இருந்தது.
தனது சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டு போட்டிகள் மிகவும் பிடித்த ஒன்று.
பலதேசங்கள் சென்று பல விதமான திறமைசார் போட்டிகளில் வென்று, தனது பரிசுகளை கொண்டே ஒரு காட்சியகம் வைத்திருந்தார்.
ஒருநாள் வேற்று நாட்டிலிருந்து ஒரு துறவி, மன்னரின் பெருமையறிந்து அவரை காண வருகை அளித்திருந்தார்.
அரசவைக்கு வந்திருந்த துறவியை மகிழ்வுடன் மரியாதையாக வரவேற்றார். துறவி மன்னனின் வரவேற்பை மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
மன்னனுக்கு சேவல் சண்டை போட்டி மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்திருந்த அவர், மன்னனுக்கு சண்டை கோழி ரகத்தில் மிகவும் திறன் கொண்ட ஒரு சேவல் குஞ்சு ஒன்றை பரிசளித்தார். ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் ஏற்றுக்கொண்டார் மன்னன்.
பின் மறுநாள் தனது குருநாதரிடம் சென்று நடந்தவற்றை கூறிய மன்னன் அவரே அந்த சேவல் குஞ்சிற்கு சண்டை பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். தன் முன்னாள் மாணவன், இன்னாள் மன்னனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார் குருநாதர்.
மன்னனை சிலகாலம் சென்று வந்து பார்க்கச்சொல்லி அனுப்பிவைத்தார் குருநாதர்.
சிலகாலம் சென்றது, மன்னருக்கு ஆர்வம்... குருவின் குடிலுக்கு வந்தார், விடலை பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தது சேவல் குஞ்சு. சரி இன்னும் நாட்கள் சென்று வருவோம் என்று சென்றுவிட்டார்.
மீண்டும் நாட்கள் கடந்திருந்தது. மன்னர் வந்திருந்தார்...
சேவலோ விடலை பருவத்தை தாண்டியிருந்தது, அருகில் இருந்த அனைத்து சேவல்களையும் விரட்டி அடித்துக் கொண்டிருந்தது.
ஆர்வத்துடன் குருவை நெருங்கி கேட்டபோது.. இன்னும் தயாராகவில்லை என்ற பதிலால் திரும்பினார் மன்னர்.
மறுபடியும் நாட்கள் பல கடந்தபின் குருவின் குடிலுக்கு வந்திருந்தார் மன்னர்.
இம்முறை அவர் கண்ட காட்சியோ அவருக்கு சிலிர்ப்பாக இருந்தது.. அந்த சேவல் இருந்த இடத்தில் வேற்றொரு சேவலும் மேயவில்லை... குடிலின் மீது ஏறி அது தன் சிறகை பயங்கரமாக அடித்துக்கொண்டு கூவிய கூவல் அதிர்வலையாய் காதுகளில் விழுந்தது... அந்தச்சத்தம் தன்னிடம் சண்டைக்கு மற்ற சேவல்களை சவாலிட்டு அழைப்பதுபோல் இருந்தது.
அவ்வளவுதான்...
மன்னரை கையில் பிடிக்க முடியவில்லை. எண்ணிலடங்கா மகிழ்ச்சி!
ஒரே ஓட்டமாக குருவினை காண ஓடிவந்தார் மன்னர்.
ஆனால் இம்முறையும் குரு சேவல் இன்னும் தயாராகவில்லை என்று கூறினார்.
மிகவும் நிராகரிக்கப்பட்டவராக மன்னர் திரும்பச் சென்றார்.
பின் நாட்கள் பல மீண்டும் செல்ல.. மன்னருக்கு இம்முறை குருவிடமிருந்து அழைப்பு வந்தது.
இம்முறை மன்னருக்கு ஓர் அதிர்ச்சி... சேவல் மிக பயங்கர உருவத்துடன் நன்கு வளர்ந்திருந்தது. ஆனால் போன முறை சிறகடித்து நின்றிருந்த இடத்தில் இப்போது சாதாரனமாக அமர்ந்திருந்தது.
இக்காட்சியால மன்னர் இடிந்து போனார்.
மன்னரை கண்ட குருவோ... 'மன்னா.. உமது சேவல் எப்படியான சண்டையிலும் வெல்ல இப்போது தயாராகிவிட்டது... நீர் அதை கொண்டு செல்லலாம்...' என்றார்!
மன்னருக்கு பெரும் அதிருப்தி... தனது குருவை எதிர்த்து கேள்வியும் கேட்க இயலாது... இருப்பினும் தனது குழப்பமோ தன்னை சித்திரவதை செய்தது.
என்னசெய்வதென்று அறியாத மன்னர் தனது ஐயத்தை போக்க வேண்டினார் குருவிடம்.
‘என்ன ஐயம் கேள் மன்னா?’ குரு.
மன்னர், ‘குருவே, இரண்டாம் முறை நான் வந்திருந்தபோது எல்லா சேவலையும் இது துரத்தி அடித்து... மூன்றாம் முறையோ கூரைமேல் நின்று ஒரு சிங்கம் முழங்குவது போல சிறகடித்து கூவியது... ஆனால்... இப்போது மிகவும் அமைதியாக அல்லவா அமர்ந்திருந்தது..' என்றார்.
மன்னரின் குழப்பத்தை உணர்ந்த குருவோ, 'மன்னா... உனது சேவல் ஒவ்வொறு முறை நீர் காணும்போதும் அது மற்றவைகளுடன் மோத முயற்சிகள் செய்து கொண்டிருந்தது.. அதற்குத் தன்னால் வெல்வோம் என்ற நம்பிக்கை இல்லையாதலால் அவ்வாறு செய்தது... ஆனால், இப்போதோ அதற்கு அதன் மீது முழு நம்பிக்கை வந்துவிட்டது... அதனால்தான் அது ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கிறது... இனி இந்தச் சேவலை நீர் எந்தப் போட்டியில் பங்கெடுக்கச் செய்தாலும் நிச்சயம் வெற்றி கொள்ளும்... வெற்றி உமதே... போய்வாரும்...’ என்று முடித்தார் குருநாதர்.
திறமை மட்டும் போதாது... தன் மீது முழு நம்பிக்கை உள்ளவனே வெற்றியடைவான் என்பதையே இந்தக் கதை காட்டுகிறது.