ஐரோப்பிய நாடுகள் ஒன்றில் மிகுந்த தொலைவில் ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊரில் பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது.
அந்தத் தேவாலயத்தில் துறவி ஒருவரும் பணியாளர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருநாள் ஆலய துறவி புதியவர் ஒருவர் மாற்றலாகி வந்தார். வந்தவர் முதல் நாளில் இருந்தே ஆலயத்தில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்தவர், ஆலயத்தில் தேவையற்ற செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், அவைகளை உடனடியாகக் குறைக்க முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயல்படுத்தப் போவதாகவும் அனைவருக்கும் அறிவிப்பு செய்தார்.
அதனால் பல வருடங்களாக அங்கு வேலை புரியும் பணியாளர்கள் முதல் புதியவர் வரை அனைவரும் ஒருவிதப் பயத்தில் ஆழ்ந்தனர்.
திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கினார் அந்தத் துறவி.
ஆலயக் கணக்குகளைப் பார்க்கும் பணி காலியாக இருந்தது. தனது புதிய திட்டமாகிய செலவு குறைப்பின் அடிப்படையில் ஆலயத்தில் இருக்கும் ஒருவரிடமே, அந்தப் பணியையும் சேர்த்து ஒப்படைக்கத் திட்டமிட்டார் அந்தப் புதிய துறவி.
எனவே அவர் அங்கு பல வருடங்களாக ஆலயமணி அடிக்கும் முதியவரிடம் சென்று, அவரின் வேலைகள் என்னென்ன? என்று கேட்டார்.
முதியவரோ தினமும் நேரத்திற்கு ஆலயமணி அடிப்பது மட்டுமேத் தனது பணியென்றார்.
உடனே துறவி, 'இன்றுமுதல் ஆலயக் கணக்குகளையும் நீரேப் பார்த்துக்கொள்ளும்' என்றார்.
பதறிய முதியவரோ... 'மன்னியுங்கள் ஐயா... எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது' என்று கூறினார். அதை ஏற்க மறுத்தார் துறவி.
அது மட்டுமல்லாது, முதியவரிடம் தான் அவருக்கு முப்பது நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் எழுதப் படிக்கக் கற்றுப் பொறுப்பேற்கவும் உத்தரவிட்டார்.
நிலைமையைப் புரிந்து கொண்டு சரி என்றார் முதியவர்.
பின்வந்த முப்பது நாட்களும் தனக்குத் தெரிந்த வழிகளில், தனக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என் எல்லோரிடமும் தனக்குக் கற்றுத் தந்து உதவுமாறு கேட்டு அலைந்தார்.
நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன. முப்பது நாட்கள் முடிந்தது. முதியவர் தனது மணி அடிக்கும் பணியில் இருந்தார்.
அதே நேரம் துறவி முதியவரிடம், 'நான் சொன்னது போல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டீரா?' என வினவினார்.
முதியவரோ தழுதழுத்தக் குரலில் 'இல்லை...' என்றார்.
துறவி, 'அப்படியானால் உமக்கு இனி இங்கு வேலை இல்லை... இன்றுடன் நீங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும்' என்றார்.
முதியவரோ, 'அய்யா... இந்தத் தள்ளாடும் வயதில் ஆலயமணி அடிப்பதைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது... என்னை இந்த வேலையை விட்டு அனுப்பிவிடாதீர்கள்...' என்று துறவியிடம் கெஞ்சினார்.
மனம் இரங்காத துறவி முதியவரைப் பணியிலிருந்து நீக்கி வெளியேற்றினார்.
என்ன செய்வதென்று அறியாத முதியவர் வெளியில் ஓர் இடம் பார்த்து அமர்ந்து, தான் இனி வாழ என்ன செய்வதென்று தவித்தவாறே அமர்ந்திருந்தார்.
அது ஒரு பெரும் பனிக்காலம்... பூமழையாய் வானிலிருந்து பனி உதிர்ந்து கொண்டிருந்தது.
எங்குபோவது? என்ன செய்வது? என்று குழம்பியிருந்த முதியவருக்குச் சற்று நேரத்தில் குளிர் பொறுக்க முடியவில்லை. எனவே குளிர் தாங்க ஒரு வெண்சுருட்டு புகைக்க எண்ணி, அருகாமையில் இருந்த கடைக்கு வாங்கச் சென்றார்.
கடைக்காரர் வந்த முதியவரிடம் இல்லை என்றார்.
உடனே முதியவர் வேகமாக மற்றொரு கடைக்கு சென்றார். அங்கும் இல்லை.
மீண்டும் வேறு கடைக்கு... அங்கும் இல்லை... இவ்வாறு அடுத்தடுத்த கடைகளுக்குச் சென்றும் எங்குமே இல்லை.
நொந்துபோன முதியவர் ஒரு ஓரமாக நின்றார்.
திடீரென அவருக்குள் ஒரு யோசனை.. 'நாம் ஏன் வெண் சுருட்டை வாங்கி இங்கிருக்கும் கடைகளுக்கெல்லாம் வினியோகிக்க கூடாது?' என எண்ணினார்.
கையில் தான் சேமித்திருந்த பணத்தை வைத்து தனக்குத் தோன்றிய வியாபாரத்தைத் துவங்கினார்.
கடுமையாக உழைத்தார்... வளர்ந்து பெருகினார்.
வெகுசில வருடங்களிலேயே அந்த நாட்டில் பெரும் பணம் படைத்தவர்களில் ஒருவரானார்!
ஒருநாள் அவரை நேர்காணல் செய்யப் பத்திரிக்கையாளர் ஒருவர் வந்திருந்தார்.
நேர்காணல் முடிவடையும் நேரத்தில்...
பத்திரிக்கையாளர், ' உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?' என்று கேட்டார்.
முதியவர், 'இல்லை... எனது பணியாளர்கள் எல்லாவற்றையும் எனக்காகப் பார்த்துக் கொள்கிறார்கள்...' என்றார்.
பத்திரிக்கையாளர், ' நீங்கள் இந்தத் தொழிலுக்கு வராமல் இருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?' என்று கேட்டார்.
அதற்கு அந்த முதியவர், 'தேவாலயத்தில் மணி அடித்துக் கொண்டிருந்திருப்பேன்.. என் ஆயுளின் பாதிக்கு மேல் அந்தப் பணிதான் செய்து கொண்டிருந்தேன்' என்றார்.
முதியவரின் கடின உழைப்பால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கண்முன் கண்டு வியந்து போனார் அந்தப் பத்திரிக்கையாளர்.