ஒரு பட்டியிலிருந்த ஆடு, நான்கு குட்டிகள் போட்டது. அதில் மூன்று குட்டிகள் கொழுகொழுவென்றும், ஒன்று மட்டும் நோஞ்சானாகவும் வளர்ந்து வந்தன.
பட்டியின் சொந்தக்காரர் அந்த நோஞ்சான் ஆட்டுக்கு என்னதான் நிறைய தீவனத்தைக் கொடுத்தாலும், அது கொஞ்சம் கூட எடை கூடவேயில்லை.
ஆகவே, அதற்குத் தீவனம் தருவதை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். அதைப் பார்த்தாலே, எரிச்சலோடும் கோபத்தோடும் நடந்து நடந்து கொண்டார்.
ஆனால், அந்த நோஞ்சான் ஆடு எதைக்கண்டும் பெரிதும் வருந்தியதில்லை.
தனக்குக் கிடைத்த தீவனத்தைத் தின்று, நன்றாகப் புல் மேய்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. அதன் பலம் முழுவதும் அதன் எலும்பிலேயே இருந்தது.
அது யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, அந்த ஆட்டுக்கு நன்றாகத் தெரியும்.
இப்படியிருக்கும் போது ஒருநாள் அந்த ஆடுகள் எல்லாம் புல் மேயச் சென்றபோது, ஒரு ஓநாய் அவைகளைத் தாக்க வந்தது.
ஆடுகளெல்லாம் பயந்து ஒதுங்கி ஓட ஆரம்பித்தன.
ஆனால், ஒரு குட்டி ஆடு மட்டும் ஒரு புதருக்குள் மாட்டிக்கொண்டது.
மற்ற ஆடுகளெல்லாம் பதறியடித்துக் கொண்டு சிதறி ஓட, அந்த நோஞ்சான் ஆடு மட்டும் அந்தக் குட்டி ஆட்டுக்கு அருகே சென்றது.
ஓநாயைப் பார்த்து முறைத்தது. தாக்க வந்த ஓநாயை முட்டித் தள்ளியது. அதற்குத்தான் எலும்பில் பலம் அதிகமாயிற்றே, ஆடு முட்டியதில் குழம்பிப்போனது ஓநாய்.
அந்த ஆட்டுக்கு பயந்து வந்த வழியே ஓடியும் போனது.
குட்டி ஆட்டை நோக்கிப் பதறி வந்த பட்டிக்காரர் அந்த நோஞ்சான் ஆட்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்.