ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். இங்கே வினோதம் என்னவென்றால், அந்த அரசனுக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தார்கள். பொதுவாக, ஒரு அரசனுக்கு எத்தனை மனைவிகள் இருந்தாலும், ஒரே ஒருவர் மட்டுமே பட்டத்து அரசியாக இருப்பார்.
ஆனால், அந்த அரசனுக்குத் திருமணமாகும் சமயத்திலேயே, இருவருக்குமே பட்டது அரசியென்ற அதிகாரம் தருவதாக வாக்களித்திருந்தார். அதன்படியே, இருவரும் பட்டது அரசிகளாக அறிவிக்கப்பட்டு, இருவருக்குமே சம உரிமையும் வழங்கியிருந்தார்.
அவர்களில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ, அந்தக் குழந்தைக்குத்தான் அடுத்து அரசனாகும் உரிமை கிடைக்கும். அது பெண்ணானாலும் சரி, ஆணானாலும் சரி.
ஆனால், அந்த இடத்தில்தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது. என்னவென்றால், அவர்கள் இருவருக்கும் ஒரே நாள், ஒரே நேரத்தில் குழந்தை பிறந்தது. இரண்டுமே இளவரசர்கள்.
இப்பொழுது, என்ன செய்வதென்றே அறியாத அந்த அரசர், தனது அமைச்சரிடம் சென்று ஆலோசனை கேட்டார்.
அமைச்சரும் "இதற்கு ஒரு வழி இருக்கிறது. முதலில், இரண்டு இளவரசர்களும் வளரட்டும். இரண்டு பேரும் குருகுலக் கல்வியை முடித்து வரட்டும். பின்னர், ஒரு நாளை ஏற்பாடு செய்து, அந்த நாளில் கல்வி, கேள்வி மற்றும் வீரத்தில், அவர்களுக்குள் ஒரு போட்டியை நடத்தலாம். அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களை நமது அரசராக ஏற்போம்" என்று ஆலோசனை சொன்னார்.
அரசனுக்கும் அது சரியென்று படவே, அந்த இரண்டு இளவரசர்களுக்கும் 'பஞ்சவன்', 'பார்த்திபன்' என்ற பெயரையும் வைத்து, அவர்களை குருகுலக்கல்விக்கு அனுப்பி வைத்தார்.
இருபது ஆண்டுகள் கடந்து சென்றன. குருகுல வாசம் முடிந்து, அந்த இரண்டு இளவரசர்களும் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அரசரும் சிறப்பான பரிவாரங்களோடு, அவர்கள் இருவரையும் வரவேற்றார். அரசிகளும் பல நாட்களுக்குப் பிறகு, தங்கள் மகன்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
'தங்கள் நாட்டுக்கான பட்டது இளவரசனைத் தேர்ந்தெடுப்பதற்கு, அதுதான் சரியான சமயம்' என்று நினைத்த அமைச்சரும், அந்தப் போட்டியை பற்றி அரசனுக்கு நினைவுபடுத்தினார்.
அடுத்த முப்பது நாட்களில் போட்டிக்கான அந்த நாளும் குறிக்கப்பட்டது.
அந்தப் போட்டியின் நிபந்தனைப்படி, போட்டியில் வெற்றி பெறுபவர், பட்டத்து இளவரசனாகி, பின்னர் அந்த நாட்டின் அரசனாக அரியணையேறுவார். தோல்வியடைபவரோ, நாட்டிலிருந்தே வெளியேறி, காட்டில் வனவாசம் மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு இளவரசர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு, அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளத் துவங்கினார்கள்.
அந்த நேரத்தில், இளவரசன் பார்த்திபன் ஒரு நாள் தனது தாயை வந்து சந்தித்தான். அவளிடம், "அம்மா! எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இளவரசன் பஞ்சவன் என்னைத் தோற்கடித்து விடுவானோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில், இளவரசன் பார்த்திபன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன். அது மட்டுமல்லாமல், வில் வித்தையிலும் வாள் விதையிலும்கூட, அவனை வெல்லும் வீரன் இந்த உலகத்திலேயே பிறக்கவில்லையென்று என் குருவே சொல்லுவார். ஒருவேளை தோற்றுப் போனவர் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால், நானல்லவா காட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று வருந்திக் கூறினான்.
அரசியும் அவன் கூறியதைக் கேட்டு, மிகவும் வருத்தமடைந்தாள்.
ஆனாலும், "எப்பேர்ப்பட்ட வீரனையும் நம்மால் வெற்றி கொள்ளமுடியும். கலங்காதே!!" என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.
அதே நேரத்தில், ஒரு திட்டத்தையும் தீட்டினாள்.
அந்தத் திட்டத்தின்படியே, அவர்களது அமைச்சரின் மகனான ஆனந்தன், இளவரசன் பஞ்சவனை வந்து சந்தித்தான். அவனிடம், "நாம் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லலாம்" என்றான்.
போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருப்பதால், முதலில் மறுத்த பஞ்சவன், பின்னர் "சரி, இந்த ஒரு இரவுதானே !!" என்று நினைத்துக் கொண்டு, ஆனந்தனோடு சேர்ந்து, மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான்.
அப்பொழுது, ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும், மிகுந்த வெளிச்சமாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள்.
"இரவு நேரத்தில், இப்படி ஒரு வெளிச்சமா?" என்று ஆச்சரியப்பட்ட இளவரசன், அந்த இடம் நோக்கி தனது குதிரையைச் செலுத்தினான்.
அந்தக் கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மக்கள் ஒரு கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி, அந்தக் கூட்டத்திற்கு அருகில் சென்று பார்த்த பொழுது, அங்கு ஒரு மல்யுத்தம் நடப்பது தெரிந்தது.
அதில் ஒரு மல்யுத்த வீரன், தன்னிடம் போட்டியிட்ட அனைவரையும் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தான்.
அவ்வப்போது ஆனந்தமாக கர்ஜித்து, "என்னை வெல்ல இந்த ஊரில் ஒருவருமே இல்லையா? " என்று சொல்லிக் கொண்டான்.
உடனே அமைச்சரின் மகன் சுனந்தன், "ஏன் ? நான் இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு, முன்னால் சென்று சண்டையிட்டுத் தோல்வியுற்றான்.
அது கண்டு கோபமுற்ற இளவரசன் பஞ்சவன், "நீ வீரனாக இருந்தால் என்னுடன் வந்து சண்டையிட்டு வெற்றி பெற்றுக் காட்டு" என்று அந்த மல்யுத்த வீரனுக்கு அறைகூவல் விடுத்தான்.
பின்னர், அவனோடு போட்டியிட்டு வெற்றியும் பெற்றான்.
உடனே, அங்கிருந்தவர்கள் அனைவரும் மாறுவேடத்திலிருந்த பஞ்சவனை வெகுவாக பாராட்டினார்கள்.
ஆனால், அந்த மல்யுத்த வீரனோ "இதெல்லாம் செல்லாது. இந்தமுறை உனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துவிட்டது. நான் ஏற்கனவே மற்றவர்களோடு போராடி சோர்வடைந்திருந்ததால், நீ என்னை வெற்றியடைந்து விட்டாய். எங்கே, உனக்கு துணிச்சலிருந்தால் தொடர்ந்து 25 நாட்கள் என்னோடு போட்டியில் கலந்துகொள். ஒரே ஒருநாள் கூட, நீ என்னிடம் தோற்கக்கூடாது. உண்மையிலேயே ஒரு வீரனாக இருந்தால் என்னுடன் அந்தப் போட்டிக்கு வா பார்க்கலாம்" என்று சொன்னான்.
பஞ்சவனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவனுக்கு எப்பொழுதுமே, 'தான் ஒரு சிறந்த வீரன்' என்ற எண்ணம் உண்டு. அதைச் சீண்டும் வகையில், எதிரியின் அறைகூவல் இருக்கவே, கோபம் அதிகமாகி "பார்க்கலாம் 25 நாட்களில், ஒருநாள் நீ வெற்றி பெற்றால் கூட, நான் உனக்கு சேவகம் புரிவேன்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான்.
பின்னர், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக அந்த மல்யுத்தப் போட்டி நடக்கிறது. பஞ்சவனும் அதில் பங்கெடுத்துக் கொண்டான். தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றான்.
அவ்வப்போது கோபமடையும் அந்த மல்யுத்த வீரன், பஞ்சவனைப் பார்த்து, "நீ ஏதோ தில்லுமுல்லு செய்கிறாய். அதனால்தான் உன்னால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது" என்று கிண்டலும் கேலியும் செய்து வந்தான்.
அந்த வீரனின் பேச்சு, பஞ்சவனை இன்னும் அதிகமாக அந்தப் போட்டியில் கவனம் செலுத்த வைத்தது.
'போட்டியில் வெற்றி பெற வேண்டும்' என்ற ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்து, கடைசியாக 25 நாள் நாள் நாள் சண்டை போட்டியிலும் தானே வெற்றி பெற்றான். ஒருமுறை கூட, இந்த மல்யுத்த வீரன் வெற்றி பெறவேயில்லை.
கடைசியாக தோல்வி அடைந்த அந்த மல்யுத்த வீரன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தன்னிடமிருந்த ஒரு முத்து மாலையைக் கழற்றி பஞ்சவனின் கழுத்தில் போட்டுவிட்டு, "உண்மையிலேயே, நீ ஒரு பெரிய வீரன்தான்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டான்.
இளவரசனுக்கு அது மிகவும் பெருமையாக இருந்தது.
இப்பொழுது பார்த்தால், அரசனாவதற்கான அந்தப் போட்டிக்கு வெகு சில நாட்கள் மட்டுமே, மீதமிருந்தன. அதனால், அதற்கானப பயிற்சிகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் பஞ்சவன்.
அப்பொழுதுதான், அவனுக்கு தனது உடல் சோர்வுற்று இருப்பது புரிந்தது. இரவு நேரங்களில் விழித்திருந்து அந்தப் போட்டியில் கலந்துகொண்டது, அவனது உடலை வெகுவாகப் பாதித்திருந்தது. அது மட்டுமல்லாது, சதா காலமும் அந்தப் போட்டியைப் பற்றியே சிந்தித்து வந்ததால், இந்தப் போட்டிக்கு அவன் பெரிதும், பயிற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் பார்த்திபனோ, வெகு அழகாகப் பயிற்சிகளை மேற்கொண்டு, தனது கவனத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தான்.
கடைசியாக, போட்டிக்கான நாளும் வந்தது.
பஞ்சவனால், எப்பொழுதும் போல, தனது 100 சதவிகிதத் திறனையும் அங்கு பயன்படுத்த முடியவில்லை. எப்பேர்ப்பட்ட வீரனாக இருந்தாலும், உடலும் மனமும் சோர்வடைந்த நிலையில், தனது முழு ஆற்றலை வெளிப்படுத்தவியலாது அல்லவா? ஆகையால், கல்வி கேள்விகளிலும் வீரத்திற்கானப் போட்டிகளிலும் தோல்வியடைந்தான் பஞ்சவன்.
அவனைவிடத் திறமை குறைந்தவனாக இருந்தாலும், அந்தப் போட்டியில் வென்று நாட்டுக்கே அரசனானான் பார்த்திபன்.
அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாகப் பார்த்திபன் அறிவிக்கப்பட, இளவரசன் பஞ்சமனோ வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.
காட்டுக்குச் சென்று, மன வருத்தத்துடன் வாழ ஆரம்பித்தான். ஒருநாள், காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த பொழுது, சற்று தொலைவிலே, தான் முன்பு சந்தித்த மல்யுத்த வீரனைக் கண்டான்.
பஞ்சவனைப் பார்த்ததும், ஓடி ஒளிந்துகொண்டான், அந்த வீரன்.
அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அவன் பின்னாலேயே சென்றான் பஞ்சவன்.
அங்கு பார்த்தால், ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில், இவன் முன்பு மல்யுத்தத்தின்போது பார்த்த மக்கள் அத்தனை பேரும் இருந்தார்கள். யவனர்கள் அனைவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பஞ்சவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவர்களிடம் சென்று, கோபமாக "அப்படியெனில், நீங்கள் என்னை ஏமாற்றினீர்களா? போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என்று எல்லோருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்களே !! உங்களால் நான் என் நாட்டையும் இழந்தேனே... " என்று கோபத்தோடு கேட்டான்.
உடனே அந்த மல்யுத்த வீரன், "இதை ஏன் எங்களிடம் கேட்கிறாய்? அன்று உன்னுடன் ஒருவன் வந்தானே, அவனிடம் சென்று கேள்... அவன்தான், நான் ஒரு இளைஞனை அழைத்து வருவேன். அந்த இளைஞனிடம் நீங்கள் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும். 25 நாட்கள் அந்த வாலிபனைச் சமாளிக்க வேண்டுமென்று சொல்லி, பொற்காசுகள் தந்தான். நாங்கள் செய்தோம்" என்று பதிலளித்தான்.
இப்பொழுது பஞ்சவனுக்கு எல்லாமேப் புரிந்துவிட்டது. தனது கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியில் சிக்கி, இன்று எல்லாம் இழந்து நிற்பது, அவனுக்குப் புரிந்தது.
"சூழ்ச்சியை செய்தவன் அரசனாகி விட்டான். அவனுக்குத் துணை நின்ற சுனந்தன், அமைச்சராகி விட்டான். அடி வாங்கினாலும் மிதி வாங்கினாலும், அந்த மல்யுத்த வீரனுக்கு, அவனுக்குத் தேவையான பணம் கிட்டிவிட்டது. ஆனால், நல்லாவா இன்று காட்டில் திரிகிறோம்... நம்மை அறியாமல் பின்னப்பட்ட இந்த சூழ்ச்சியில், நமது உழைப்பையும் நேரத்தையும் சிந்தனையையும் கொடுத்து நாமல்லவா வருந்துகிறோம்” என்று கண்ணீர்விட்டு வருந்தினான்.
ஆனால், வருந்தி என்ன பயன் ?
உங்களுக்கும், உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் லட்சியங்கள் இருக்கும். உங்களுக்கான போட்டிகளும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதில் மட்டுமே உங்கள் கவனத்தை நீங்கள் செலுத்தும்படி இந்த உலகம் உங்களை விடப் போவதில்லை. உங்களைச் சுற்றி ஆயிரம் விஷயங்கள் நடக்கும். அதில் உங்களுக்குப் பயனுள்ளதாக சிலவும், பிறருடைய சுயலாபத்துக்காகச் செய்யப்பட்டதாகச் சிலவும் இருக்கும். எது எது எப்படிப்பட்டது என்பதை அறியும் அறிவை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணர்ச்சியைத் தூண்டி, உடலையோ, மனதையோ உளைச்சலுக்கு ஆளாக்கும் எதையும், சீக்கிரமாகக் கண்டறியுங்கள். அவற்றால், இழப்பு உங்களுக்கு மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையில்லாத எதிலும் உங்கள் கவனத்தை அதிகம் வைக்காது, உங்கள் லட்சியத்தில் மட்டுமே உங்கள் கவனத்தை வைத்து, அதில் மட்டுமே உங்கள் உழைப்பைக் கொடுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்.