ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஞானி ஒருவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்.
அந்த ஊரிலிருக்கிற மக்கள் நிறையபேர், அவரிடம் வந்து தங்களது குறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு நாள், ஒரு வியாபாரி அவரைப் பார்க்க வந்தார். அவருக்குத் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுப் பெரிய அளவில் மனக்கஷ்டத்தோடு இருந்ததையும் அந்த ஞானியிடம் பகிர்ந்து கொண்டார்.
அதைக் கேட்டபின் அந்த ஞானி, தனது மூட்டைக்குள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்து, "இதில் நான்கு ரகசியங்கள் இருக்கின்றன. இவற்றால், நீ நிச்சயம் உன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைத் தொட முடியும்" என்று சொன்னார்.
அவனும் மிக ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு, தனது வீட்டுக்குத் திரும்பினான்.
வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில், நான்கு பொருட்கள் இருந்தன. ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு சிப்பி, ஒரு வெண்முத்து ஆகியவை இருந்தன.
அதையெல்லாம் பார்த்ததும், அந்த வியாபாரிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். ஏதாவது தங்கம், வெள்ளின்னு இருந்திருக்கலாம். அல்லது ஒரு சாமி சிலையாவது இருந்திருக்கலாம். “இது என்ன ? எந்தத் தொடர்புமில்லாமல் ஏதேதோ இருக்கிறதே” என்று வருந்தினான்.
ஆனாலும், அதற்குள் ஏதோ புதிர் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதனால், மறுபடியும் அந்த ஞானியைச் சந்திக்கச் சென்றான்.
அந்த ஞானியோ, "நாளை வா" என்று சொன்னார்.
அடுத்த நாளும், அந்த வியாபாரி அந்த இடத்துக்குச் சென்றார்.
அடுத்த நாளும் இதே தான். "நாளைக்கு வா" என்று சொன்னார் ஞானி.
வியாபாரி மறுபடியும் வந்தான். இந்த ஞானியும் சொல்வதாக இல்லை. அந்த வியாபாரியும் விடுவதாக இல்லை. இப்படியேப் பத்து நாள்கள் ஆகிவிட்டன.
பதினோராவது நாள். அன்று அந்த ஞானி, அந்த ஊரை விட்டுக் கிளம்பும் நாள், அதுதான்.
அன்று எப்படியும் தனக்கான பதிலை அவர் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் அந்த வியாபாரி வந்தார்.
அந்த ஞானியும் அவரிடம் அந்தப் பெட்டியைத் திறக்கும்படிச் சொன்னார். அன்று பார்த்தது போலவே, அந்தப் பெட்டியில் ஒரு மணி, ஒற்றை ருபாய் நாணயம், ஒரு முத்து ஆகியவை இருந்தன.
சிரித்துக்கொண்டே, அவற்றுக்கு விளக்கம் சொன்னார் அந்த ஞானி.
அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. அந்த ஒற்றை ருபாய் நாணயம், செல்வதைக் குறிக்கிறது. அந்தச் சிப்பியும், அந்த முத்துக்களும் வார்த்தைகளைக் குறிக்கின்றன.
அந்த மணி, காலத்தைக் குறிக்கிறது. முதலில், ஒரு மனிதன் தனது நேரத்தைச் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நேரத்தைச் சரியாகக் கையாள்கிறவன், எல்லாவற்றையுமே சரியாகக் கையாள்கிறான்.
இரண்டாவது, அந்த ஒற்றை ருபாய் நாணயம். ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் செல்வத்தையும் சரியாகக் கையாள வேண்டும். உழைத்துச் சேர்க்கும் செல்வத்தை எப்பொழுது எப்படி எதற்குச் செலவழிக்க வேண்டும் என்பதை யோசித்துச் செயல்பட வேண்டும்.
அதே நேரத்தில், எவ்வளவுதான் செல்வத்தைச் சேர்த்தாலும், இறுதியில் இந்த ஒற்றை ருபாய் நாணயம் கூட நமக்குச் சொந்தமில்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஞாபகம் வைத்தால் மட்டுமே, வாழ்வில் நிம்மதியும் இருக்கும்.
மூன்றாவது, அந்த முத்துக்கள். மூழ்கியெடுக்கும் முத்துக்களைப் போல, நீ பயன்படுத்தும் வார்த்தைகள் இருக்க வேண்டும். என்னதான் முத்தாக இருந்தாலும், தேவையில்லாத இடத்தில் அதை வீசி எறியக் கூடாது. மதிப்பு இருக்காது. அதைப்போலத்தான் வார்த்தைகளும். தேவையில்லாத இடத்தில், பேசக்கூடாது. தேவையான இடத்தில், ஆராய்ந்து அளந்து பேச வேண்டும்.
"இவைதான் நான் சொன்ன ரகசியங்கள்" என்று சொன்னார் அந்த ஞானி.
"நான்கு ரகசியங்கள் என்று சொன்னீர்களே. அந்த நான்காவது ரகசியம் என்ன ?" என்று கேட்டான் அந்த வியாபாரி.
"இந்த மூன்று ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதை செயல்படுத்தவும் தெரிய வேண்டும் " என்று சொல்லி முடித்தார் அந்த ஞானி.
நாம் பல நேரங்களில், நேரத்தை வீணடித்த பின்தான் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். பணத்தை விரயம் செய்த பின்தான், பணத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். கோபத்தில் வார்தையைப் பேசிவிட்டுக் காயப்படுத்திய பின்னரோ, ரகசியங்களை சொல்லிவிட்டு துரோகத்தை அனுபவித்த பின்னரோதான், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிகிறோம்.
ஆக மொத்தத்தில், எல்லாம் கைமீறிப் போன பின்னர்தான், அதனதன் முக்கியத்துவமேப் புரிகிறது. அந்த மாதிரி இல்லாமல், முன்னரே அவற்றின் முக்கியம் அறிந்து செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால், உண்மையோடு இருந்தால், விடாமுயற்சியோடு செயல்பட்டால், நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.