இரு நண்பர்கள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
அது ஒரு குளிர் காலம், மாலை நேரம், அவர்களுக்குக் கதகதப்பான சூழ்நிலை தேவையாக இருந்தது. எனவே நெருப்பு மூட்டிக் குளிர் காயலாம் என முடிவு செய்தனர்.
அங்கிருந்து அவர்களால் விறகுகளைத் திரட்ட முடிந்தது. ஆனால், அதற்கு தேவையான நெருப்பை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
அவர்கள் இருவரும் மாயங்கள் பல கற்ற பெரும் அறிஞர்கள். அவர்களால் அவர்கள் விரும்பும் வடிவை எடுக்க முடியும்.
அவர்களுடைய மரபில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது, நரகத்திற்கு செல்பவர்கள் நெருப்பு போன்ற கொடும் தண்டனைகளைப் பெறுவார்கள் என்பது.
இச்சூழலில், நெருப்பு மூட்டிக் குளிர் காய நெருப்பு இல்லை என்றதும், அந்த இரு நண்பரில் ஒருவர் சொன்னார்,
நான் பறவையாக மாறி நரகம் செல்கிறேன். “அங்கேதான் அதிக நெருப்பு இருக்கிறதே அதில் சிறிதை எடுத்து வருகிறேன்” எனச் சொல்லிச் சென்றவர் சில மணி நேரம் கழித்து வெறும் கையுடன் திரும்பினார்.
மற்றொரு நண்பர் கேட்டார், “நெருப்பு எங்கே?”
“நான் நரகம் முழுவதும் தேடி விட்டேன் அங்கே நெருப்பும் இல்லை. அங்கே வேறெந்த கடுமையான தண்டனை சடங்கும் இல்லை”
இந்தக் கதையின் பொருள் என்னவெனில், நரகம் என்பது நாம் நினைப்பது போல நாடகத்தனமான ஒரு இடம் அல்ல. அது சூட்சுமமாக இருக்கும் ஒன்று. எங்கே துன்பமும், துயரமும், அச்சமும், சோர்வும், இதர எதிர்மறை ஆற்றலும் இருக்கிறதோ அது நரகம். எங்கே ஆனந்தம், மகிழ்ச்சி, அன்பு, காருண்யம், கருணை இருக்கிறதோ அது சொர்க்கத்தின் குறியீடு அவ்வளவுதான்.
யார் எந்த ஆற்றலை அதிகம் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் அதையேப் பிராப்தமாக பெறுவார்கள். நல்ல ஆற்றல் வைத்திருப்பவர் நரகம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கேச் சென்றாலும் அவர் பெறப்போவது நன்மையை மட்டுமே...