இந்திர லோகத்தில் இந்திரனும், நாரதரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நாரதரே பேராசை பெருநஷ்டம் என்று சொல்கிறார்கள். ஆனாலும் ஏன் மனிதர்கள் பேராசைப்படுவதை நிறுத்துவதே இல்லை” என்று கேட்டான் இந்திரன்.
“அது மனிதர்களுக்கே உரியது” என்று பதிலுறுத்தார் நாரதர்.
“அதைத் தீர்க்கவே முடியாதா?” என்றான் இந்திரன்.
“மிகவும் சிரமமான கேள்வியாயிற்றே இது. இருப்பவனுக்கு எவ்வளவு இருந்தாலும் போதாதே. அவனைத் திருப்திபடுத்துவது இயலாத காரியம் ஆயிற்றே” என்றார் நாரதர் பதிலுக்கு.
அப்படியானால் ஒன்று செய்வோம். பூலோகத்தில் வெற்று மனிதனாக இருப்பவனைச் சோதித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
இருவரும் பூலோகம் வந்தனர்.
பிச்சைக்காரன் ஒருவன் கையில் எந்தப் பாத்திரமும் இல்லாமல் தனித்து இருந்தான். யாராவது உணவு கொடுத்தால் கூட அதைக் கையால் வாங்கியே உண்டான். கிழிந்த கந்தல் ஆடையோடு இருந்தவனைத் தேர்ந்தெடுத்து விலை உயர்ந்த ஆடையுடன் அவனிடம் சென்றார்கள்.
“இவ்வளவு கிழிந்த ஆடையை உடுத்திக் கொண்டிருக்கிறாயே. எங்களிடம் இந்த ஆடை வீணாக இருக்கிறது. இதை வேண்டுமானால் உடுத்திக்கொள். உன் ஆயுள் முழுமைக்கும் இந்த ஆடை கிழியாமல் நேர்த்தியாக இருக்கும்” என்றார்கள்.
பிச்சைக்காரன் நன்றி சொல்லியபடி, அந்த ஆடையை வாங்கி அணிந்து கொண்டான்.
இப்போது அவனது தோற்றம் சற்று செல்வம் மிக்கவனாக காட்டியது. அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி இது போதும் வாழ்வு முழுமைக்கும் என்றான்.
ஒரு வழியாக திருப்தியான பேராசை இல்லாத மனிதனைக் கண்டு விட்டோம் என்று நாரதரும், இந்திரனும் மகிழ்ந்தார்கள்.
“உனக்குத்தான் இந்த ஆடை இறுதிவரை இருக்குமே. அப்புறம் எதற்குக் கந்தல் துணிகளை வைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
அவனும் ஆமோதித்தான். பிறகு இருவரும் திரும்பும் சமயம் அதை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டான்.
அவனுக்கு சந்தேகம் வேறு இந்த ஆடை உண்மையில் உறுதியாக இருக்குமா. அப்படியே வைத்துக் கொண்டாலும் மாற்றுத்துணி வேண்டுமே என்று பத்திரமாக பழைய கந்தல் துணியைப் பாதுகாத்து வந்தான்.
மறுநாள் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வந்தார்கள் இந்திரனும், நாரதரும். கக்கத்தில் துணி மூட்டையை வைத்தபடி உணவை தேடி அலைந்தான். விருந்து ஒன்றில் இவனுக்கு உணவு பரிமாறினார்கள். அப்போதும் அவன் விருந்தின் சுவையைக் கவனிக்காமல், கீழே விழுந்த துணிமூட்டையில் கவனம் வைத்திருந்தான். கண் அருகேச் சுவையான உணவுகள் இருந்தும் அவனால் வயிறு நிறையச் சாப்பிடமுடியவில்லை. நாட்கள் கழிந்தது.
ஆடைகள் கொடுத்தவர்கள் சொன்னது போல் இது உறுதியான ஆடைதான் போலும். ஆனாலும் இந்த ஆடையைத் தூக்கிப் போடாமல் வைத்துக் கொள்ளலாம் என்று அதைக் கையிலேயே வைத்துக்கொண்டு திரிந்தான். எல்லோரும் செல்வாக்கான ஆடை உடுத்திய கந்தல் துணி பிச்சைக்காரன் என்று அழைத்தார்கள்.
வயதாகிவிட்டது. மரணப்படுக்கையில் கிடந்தான். அப்போதாவது திருந்திவிட்டானா என்று பார்க்க இந்திரனும், நாரதரும் வந்தார்கள். அப்போதும் தலைமாட்டிலேயே கந்தல் துணி மூட்டையை வைத்து இருந்தான்.
அவனிடம் விலை மதிக்கமுடியாத ஆடை இருந்தும், இந்தக் கந்தல் துணி மூட்டை அவன் மகிழ்ச்சியை முற்றிலும் குலைத்துவிட்டது. நல்ல ஆடையைக் கொடுத்தும், அவனது பேராசையால் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டான்.
மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களைத் திருத்த முடியாது என்று உணர்ந்து கொண்டார்கள் இந்திரனும், நாரதரும்.
வேண்டாத இந்த அழுக்கு மூட்டை போல் மனிதர்களும் தம்மிடம் இயல்பாகவே இருக்கும் நல்ல குணத்தை விடுத்து, பொறாமை, கோபம், வஞ்சம், சூது, பகைமை என்று மனத்தை நிரப்பி, அவற்றைச் சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
அதை வெளியேத் தூக்கி எறிந்தால் வாழ்வு முழுமைக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் இவற்றையெல்லாம் யார் தூக்கி எறியப் போகிறார்கள்...?