ஒரு கிராமத்தில் வியாபாரி ஒருவன் இருந்தான். செய்யும் தொழில்தான் தெய்வம் என்று நியாயவாதி போலப் பேசுவான். அரிசி வியாபாரம் செய்து வந்த அவன், ஒரு மூட்டை அரிசியில் ஒரு கிலோ நெல்லாவது கலந்து விடுவான்... கூடவே கல்லும், உமியும், கறுப்பும் கூட இருக்கும். இப்படிக் கலப்படம் செய்தே இலாபத்தில் பெரும்பகுதியைச் சம்பாதித் தான். அவன் கைப்பட்டால் எந்த பொருளும் கலப்படமில்லாமல் விற்பனைக்கு வராது. கலப்படமே தெரியாமல் பொருள்களை விற்பதில் பலே சாமார்த்தியசாலியாக இருந்தான்.
அவன் குடும்பத்தினர் பலமுறை ”இப்படியெல்லாம் ஏமாற்றித்தான் இலாபம் பெற வேண்டுமா...? நியாயமாகச் சம்பாதிக்கும் வருமானம் போதாதா?” என்றெல்லாம் எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இவன் எதையும் காதில் வாங்காமல் தான தர்மம் செஞ்சா, எல்லா அநியாயங்களும் புண்ணியக்கணக்கில வந்திடும் என்பான். அப்படிச் சொன்னது போலவேக் கோயில் தர்ம காரியங்களிலும் அன்னதானம் செய்வதிலும் முக்கியத்துவம் கொடுத்து தன் பங்குக்கும் ஏதாவது செய்து கொண்டிருந்தான்.
ஊரில் இருக்கும் மக்களுக்கு அவன் தொழிலில் செய்யும் அத்தனை அநியாயங்களும் தெரியும். ஆனாலும், அவ்வப்போது அவன் செய்து வரும் உதவிகளால் யாரும் அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. எப்போதும் போலவே, அவனும் கலப்படமும் தானமும் என்று வாழ்ந்தான். மரணத் தருவாயிலும் செய்த தான தர்மம் காக்கும் என்று நம்பினான். எல்லாம் முடிந்தது. எம தூதர்கள் அவனை எமனிடம் அழைத்துச் சென்றார்கள்.
அவன் முறை வந்ததும் ”நரகத்துக்கு தள்ளிவிடுங்கள்” என்றான் எமன்.
“என்ன நியாயம் இது... நான் எவ்வளவோ தர்மம் செய்து வந்திருக்கிறேன். நியாயப்படி பார்த்தால் என்னைச் சொர்க்கதுக்கு அனுப்ப வேண்டும்” என்றான்.
எமனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ என்னென்ன தர்மங்கள் செய்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
அவனும் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள், அன்னதானம், உதவி என்று அனைத்தையும் சொன்னான்.
“அவ்வளவும் கலப்படம் செய்து பொருளை விற்றதால்தானே?” என்று கேட்டான் எமன்.
“ஆமாம். ஆனால், அதற்கு ஈடாகத்தான் நான் தானம் செய்தேனே...” என்றான்.
“சரிதான் நீ செய்த தானத்தின் பலனை நற்பலனாக, அடுத்தப் பிறவியில் அனுபவிப்பாய். ஆனால், இப்பிறவியில் செய்ததற்குத் தண்டனை இப்போதே வழங்கப்படும்” என்றான்.