ஒரு ரமலான் மாதத்தில், தள்ளாத வயதுடைய ஒரு முதியவர் ஒரு மூலையில் அமர்ந்து எதையோச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சில இளைஞர்கள் அவர் அருகில் வந்து, “என்ன... பெரியவரே ! உங்களுக்கு நோன்பில்லையா?” என்று கேட்டனர்.
அதற்கு அவர் சொன்னனார்:
“யார் சொன்னது எனக்கு நோன்பு இல்லையென்று ? எனக்கு நோன்பு உண்டு! ஆனால் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது“
இளைஞர்கள் பலமாகச் சிரித்தனர்.
“ஹா...ஹா...ஹா... இப்படியொரு நோன்பு உண்டா...? இது என்ன வகை நோன்போ...?”
முதியவர் சொன்னார் :
“ஹே... எனக்குப் பொய் பேசும் பழக்கம் கிடையாது.
யார் மீதும் கெட்ட எண்ணம் வைப்பதில்லை.
யாரையும் பரிகாசம் செய்வதில்லை.
எவரையும் ஏளனம் செய்வதில்லை.
எவர் மனதையும் நோகடிப்பதில்லை.
அவதூறு சொல்வதில்லை. புறம் பேசுவதில்லை.
எவர் மீதும் பொறாமை கொள்வதில்லை.
ஐந்து வேளை தொழுகையும் நேரம் தவறாமல் பள்ளிக்குச் சென்றுதான் தொழுவேன்.
குர்ஆன் ஓதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்குவதுண்டு.
அப்புரம்…ஹராமான எதையும் சாப்பிடுவதில்லை.
தகுதியற்ற எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்வதில்லை.
பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் நம்பிக்கையோடு நடந்து கோள்வேன்.
ஆனால் இப்போது எனக்கு வயதாகிவிட்டதாலும் இயலாமையினாலும் என் வயிற்றுக்கு நோன்பு இல்லை”
இவ்வாறு கூறிவிட்டு முதியவர் அந்த இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார் :
“அது இருக்கட்டும்… நீங்கள் நோன்பு வைத்திருக்கிறீர்களா...?”
அதற்கு, அந்த இளைஞர்களில் ஒருவன் தலைகுனிந்தவாறே சொன்னான்:
“இல்லை..! நாங்கள் சாப்பிடாமல் இருக்கிறோம் அவ்வளவுதான்...!”