தவசீலர் ஒருவர், தினமும் ஹரி கதைகளைக் கூறி வந்தார். அதைப் பலரும் பக்தியோடு கேட்டுப் பக்குவப்பட்டனர். அவர்களில் ஒருவர் புண்யதாமா.
இல்லறவாசியான புண்யதாமா, தினமும், ஹரி கதைகளைக் கேட்பதும், வீடு தேடி வரும் அதிதிகளுக்கு, உணவிட்டு உபசரிப்பதுமாக வாழ்ந்து வந்தார்.
அவருடன், அவர் மனைவியும் பணிவிடை செய்து வந்தாள்.
ஒருநாள், கங்கையில் நீராடுவதற்காக வெகுதொலைவில் இருந்து இருவர் வந்தனர்.
அவர்களை வரவேற்று, உபசரித்து, தன் வீட்டில் தங்க வைத்தார் புண்யதாமா.
உணவுண்ண அமர்ந்த அதிதிகள், ‘இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரம் இருக்கும்?’ எனக் கேட்டனர்.
‘பக்கத்தில் இருப்பதாக சொல்கின்றனர். பல வருஷமாக இங்கே இருக்கிறேனேத் தவிர, ஒரு நாள் கூடக் கங்கையில் நீராடியதில்லை…’ என்றார் புண்யதாமா.
அதைக் கேட்டதும், ‘கங்கைன்னு சொன்னாலே, பாவங்கள் போய்விடும் என்று மகான்கள் சொல்கிறார்கள். கங்கைக்கு இவ்வளவு பக்கத்தில் இருந்தும், கங்கையில் நீராடாத இவன் வீட்டில், நாம அதிதிகளா தங்கி, பெரும்பாவம் செய்து விட்டோமே… உடனேப் போய் கங்கையில் நீராடினால்தான் இப்பாவம் போகும்…’ என்று கூறி, வேகமாக எழுந்து, கங்கையை நோக்கி நடந்தனர் அதிதிகள்.
அதனால், மன வேதனை அடைந்தனர், புண்யதாமாவும், அவர் மனைவியும்.
அதிதிகள் கங்கையை நெருங்கிய போது, தண்ணீர் இருந்த சுவடு கூடத் தெரியாமல், கங்கை வறண்டு கிடந்தது.
திகைத்துப் போன அதிதிகள், மனம் வருந்தி, ‘தாயே கங்காதேவி… நாங்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தால், எங்களை மன்னித்து, அருள் செய்…’ என, மனம் உருகி வேண்டினர்.
அடுத்த நொடி, அவர்களுக்கு கங்காதேவியின் குரல் அசரீயாகக் கேட்டது.
‘பக்தர்களே… ஹரி கதை கேட்பதையே வாழ்க்கையாக கருதும், புண்யதாமாவின் பாதங்கள், என் மீது படாதா என, நான் காத்திருக்கிறேன். ஆனால், நீங்கள் அவரின் மனதை நோகச் செய்து விட்டீர்கள். அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்; அப்போது தான், நான் உங்கள் கண்களுக்குத் தென்படுவேன்…’
உடனே, அதிதிகள், புண்யதாமாவின் வீட்டிற்கு ஓடி, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘பாகவதோத்மரே… உங்களின் பெருமை அறியாமல் பேசி விட்டோம். எங்களை மன்னியுங்கள்…’ என வேண்டினர்.
புண்யதாமாவும் மன்னித்தார். அதிதிகளும், கங்கையின் அருளைப் பெற்றனர்.