இந்திர சபை குரு பிரகஸ்பதி ஆசியுடன் அன்றைய சபை துவங்க, இந்திர லோகத்தை விஷ்ணுவின் கருட விமானம் ஒளிவீசியபடி கடந்து சென்றது.
குரு பிரகஸ்பதி இந்திரன் எமன் முதலான தேவர்கள் கருட விமானத்தில் பறந்து செல்வது யார் என்று பார்த்தனர் பார்த்த யாவருக்கும் அதிர்ச்சி.
காரணம், வைகுண்டம் நோக்கி சென்ற விஷ்ணுவின் கருட விமானத்தில் சென்றது ஒரு சாதாரண நாயின் ஆன்மா.
முதலில் அதிர்ச்சியை ஜீரணித்து கொண்ட இந்திரன் குரு பிரகஸ்பதியிடம், குருதேவா பூலோகப் பிறவிகளிலே மேன்பட்ட பிறவி மனிதப்பிறவி அப்படிப்பட்ட மனித பிறவிகளின் ஆன்மாவே எளிதில் அடைய முடியாத வைகுண்டத்தை சாதாரண நாய் அடைகிறது என்றால் எப்படி இது சாத்தியம்? இதற்கான காரணத்தைத் தாங்கள்தான் எனக்குக் கூறி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றான்.
குரு பிரகஸ்பதி கண்மூடி சற்றே ஞான நிஷ்டையில் அமர்ந்து வைகுண்டம் சென்ற நாயின் சிறப்பை அறிந்து கொண்டு பின் கண் திறந்தார்.
“தேவேந்திரா இந்த நாய் பூலோகத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலின் வாசலில் பிறந்தது. அந்தப் பெருமாள் கோயிலே கதி எனக் கிடந்த இந்த நாய், பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலம் வரும்போது தன் பசிக்கு ஏதாவது உணவு கிடைக்குமா என்ற நோக்கில், நாயும் பக்தர்களைப் பின் தொடர்ந்து கோயிலை வலம் வரும். இப்படி பக்தர்கள் வலம் வரும்போது அவர்கள் கையில் இருந்து சிதறும் கோயில் பிராசதமான தயிர் சோற்றில் உள்ள சில பருக்கைகள் கீழே விழும். இதுவே தன் பசிக்குக் கிடைத்த உணவு எனக் கருதி, இந்த நாயும் கோயிலை வலம் வந்த படியே தயிர் சோற்றுப் பருக்கைகளை உண்டு வாழ்ந்து, இன்று உயிர் துறந்து வைகுண்டம் மோட்சத்துக்குச் செல்கிறது. எல்லா நாய்களை போல் மாமிச உணவு உட்கொள்ளாமல், பெருமாள் கோயிலில் கிடைக்கும் பிராசதத்தையே தன் உணவாக எண்ணி உண்டதாலும், பக்தர்களை போல் கோயிலை வலம் வந்த காரணத்தாலும், கோயிலே கதி என கிடந்ததாலும் இந்த நாயின் ஆன்மாவை விஷ்ணு வைகுண்டத்துக்கு வர செய்து மோட்சத்தை அளிக்கவுள்ளார்” என்று குரு பிரகஸ்பதி கூற இதைக் கேட்டதும் இந்திரன் மெய் சிலிர்த்தான்.
அப்போது எமன் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.
“குருதேவா இறைவனை நெஞ்சுருக மனதில் எண்ணி வழிபட்டால்தானே அது பக்தியாகும். ஆனால், இந்த நாயோ தன் பசி தேவைக்குத்தானே கோயிலை வலம் வந்து பெருமாளுக்கு மிகப் பிடித்த நெய்வேத்யம் ஆன தயிர் சாதத்தை உண்டது. இது எப்படிப் பக்தியாகும்?”
அப்போது இந்திர லோகத்தில் தோன்றிய பெருமாள், ”எமதர்மா, இது என்ன கேள்வி? உட்கொள்ளப்படும் மருந்து விருப்பப்பட்டு உண்டாலும் அல்லது எவரேனும் அதைப் புகட்டிவிட்டாலும் அந்த மருந்தானது தன் வீரியத்தை காட்டத்தானே செய்யும் அப்படியேதான், இறை பக்தி என்பதும்... தெரிந்து வலம் வந்து வணங்கினாலும், தெரியாமல் வலம் வந்து வணங்கினாலும் அதற்குரியப் பலன்களை அந்தத் தெய்வங்கள் தந்தே ஆகவேண்டும். இதுவே தெய்வங்களின் நியதி” என்று கூறி மறைந்தார்.