முல்லா தன்னுடைய தினசரி வேலைகளை முடித்து விட்டு, இரவு வீட்டிற்கு வந்து தூங்குவதற்காகத் தன்னுடைய கண்களை மூடினார். ஆனால், அவருக்குத் தூக்கம் வரவில்லை. இருப்பினும், கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.
அந்த நேரத்தில் முல்லாவின் விட்டிற்குள் புகுந்த திருடன், அந்த வீட்டிலிருந்த உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்து, தான் எடுத்து வந்த சாக்கு மூட்டைக்குள் எடுத்து போட்டுக் கொண்டான்.
அதைக் கவனித்துக் கொண்டிருந்த முல்லா, ஒன்றும் சொல்லாமல் அமைதியாகக் கண்களை மூடிப் படுத்திருந்தார்.
திருடன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
திருடன் அங்கிருந்து செல்வதை கவனித்த முல்லா, அவனைப் பின் தொடர்ந்து சென்றார்.
முல்லா அந்த வீட்டிலிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டார்.
வீட்டிற்குள் சென்ற திருடன் திருடிய பொருட்களை எல்லாம் ஒரு அறையில் வைத்து விட்டு வெளியே வந்தான்.
அதைப் பார்த்த திருடனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
முல்லாவிடம் சென்ற திருடன், “ஐயா, இது என் வீடு. நீங்கள் என் வீட்டிற்கு வந்து எதற்குப் படுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு முல்லா, “நீதான் என்னுடைய வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் இங்கு கொண்டு வந்து விட்டாயே, இனிமேல் அங்கு எனக்கு என்ன வேலை? அதனால்தான் நானும் இங்கேயே வந்து படுத்து விட்டேன்” என்றார்.
அதைக் கேட்ட திருடன், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதுடன், “இனிமேல் நான் திருட மாட்டேன்” என்று சொல்லி முல்லாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பொருட்களை எல்லாம் அவர் வீட்டில் திருப்பிக் கொண்டு போய் வைத்தான்.