இரவு நேரம். அன்றைக்குக் கடுமையான வேலைகள் இருந்ததால் தாமதமாக இரவு உணவைச் சமைத்தாள் அம்மா. சுட்ட தோசைகளையும், சட்னி சாம்பாரையும் முன் வைத்தாள் அம்மா.
அதில் சில தோசைகள் மிகவும் கருகியிருந்தன. நன்றாக இருந்த தோசைகளை அம்மாவிற்கும், மகனுக்கும் போட்டுவிட்டு கருகிய தோசைகளை எடுத்துக் கொண்டார் அப்பா.
அந்தக் கருகிய தோசைகளை மகனுடன் இனிமையாக அன்றைய நிகழ்வுகளைப் பேசிக்கொண்டே ரசித்து ருசித்துச் சாப்பிட்டார் அப்பா.
சாப்பாடு முடிந்தவுடன் அம்மா அப்பாவிடம் தோசை கருகிப் போனதற்காக மன்னிப்பு கேட்டார்.
ஆனால் அப்பாவோ, “எனக்குக் கருகிய தோசைகள்னா ரொம்ப பிடிக்கும்மா...” எனக் கனிவோடு புன்னகையுடன் கூறினார்.
அன்றிரவு தூங்கும் முன் மகன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா உங்களுக்கு உண்மையாலுமே கருகிய தோசை பிடிச்சிருந்ததா...?”
அப்பா அதே புன்னகையுடன் சொன்னார்:
“உங்கம்மாவுக்கு இன்னைக்கு ரொம்ப அதிகமான வேலை... அது அவங்களை ரொம்பக் களைப்பா ஆக்கிடுச்சு... ஆனால், இந்தக் கருகின தோசை என்னை என்ன செஞ்சிடப் போகுது?”