ஒரு நாடோடிக் கூட்டத்தினர் பாலைவனம் வழியேத் தங்கள் ஒட்டகங்களுடன் போய்க் கொண்டிருந்தனர்.
சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால், கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள்.
ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்துக் கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்குக் கயிறு, கழி இரண்டும் இல்லை.
ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.
அவ்வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவரிடம், “தங்களிடம் கயிறு, கழி இருக்கிறதா?” என்று கேட்டனர் அந்த நாடோடிகள்.
அவர், “என்னிடம் கயிறு, கழி எதுவுமில்லை. நீங்கள் அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.
வழிப்போக்கர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும், அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாகக் குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம், அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரான போது மறுபடியும் பிரச்சினை.
கட்டப்பட்டதாக பாவனை செய்யப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும், உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது.
மறுபடியும் அவர்கள் அந்த வழிப்போக்கரிடம் போனார்கள்.
“அதை அவிழ்த்துவிட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.
வழிப்போக்கருக்கு மூளை எதுவும் பிசகிவிட்டதா? என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் நாங்கள் கட்டவே இல்லையே?”என்றார்கள்.
“கட்டினது மாதிரி பாவனைதானேக் காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”
“அப்போது அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”
“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”
“சொன்னதைச் செய்யுங்கள்”
அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.