ஒரு கிராமத்தில் வங்கியொன்று இருந்தது, அதன் மேலாளரிடம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயக்கடன் கேட்டு வந்திருந்தார்.
மேலாளர் கடன் விண்ணப்பத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.
“எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த விவசாயி பதில் சொன்னார், “கொஞ்சம் மாடு வாங்கி, பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”
வங்கி மேலாளர் அந்த விவசாயிடம், “அடமானமாக என்ன தருவீங்க…?” என்றார்.
விவசாயி சிறிது குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன...?”
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்குச் சமமாக ஏதாவது சொத்து கொடுத்தால் தான் வங்கி பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!” என்று மேலாளர் விளக்கம் சொன்னார்.
விவசாயி சொன்னார்.
“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு எருமை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.
மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, இறுதியாக நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தைக் கடனாகத் தர ஏற்பாடு செய்தார்.
சில மாதங்கள் கழிந்தது.
அந்த விவசாயி மீண்டும் வங்கிக்கு வந்தார்.
தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு முழு பனத்தையும் கட்டினார்.
வங்கி மேலாளர் ஆச்சர்யத்துடன் கேட்டார், “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் கிடைத்ததா?
அந்த விவசாயி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”
மேலாளர் யோசித்தார்.
‘இந்த மாத இலக்குக்குச் சரியான ஆள் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே, ”ஏன் நீங்க பணத்தை எங்க வங்கியில டெபாசிட் பன்னலாமே …?” என்றார்.
விவசாயி கேட்டார்.
“டெபாசிட்னா என்ன…?”
மேலாளர் விளக்கமாய்ப் பதில் சொன்னார்,
“நீங்க எங்க வங்கியில் உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில பணத்தைப் போட்டு வைங்க, உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்போதெல்லாம் நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”
என்று விளக்கமாகச் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த அந்த விவசாயி சற்றே சாய்ந்து உட்கார்ந்தபடியே திருப்பிக் கேட்டார்.
“அடமானமாக என்ன தருவீங்க…?”