இராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லட்சுமணரும் கிளம்பி விட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார்.
தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், அதேப் பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவும் விரகதாபமும் அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.
ஆகவே, அவர் தன்னை வெறுக்கும்படிதான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை.
தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள்.
லட்சுமணன் வந்து கானகம் செல்வதைப் பற்றிக் கூறியவுடன், “தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர, உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? உங்கள் அண்ணிதான், உங்கள் அண்ணனை மணந்த பாவத்துக்கு அவர் பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூடப் போகமாட்டேன். வாருங்கள் என்னுடன்; நாம் மிதிலைக்குப் போய் சிறப்பாக வாழலாம்” என்றாள்.
லட்சுமணன் கோபத்துடன், “நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயேச் சுகமாகப் படுத்துத் தூங்கு; என் அண்ணன், அண்ணியுடன் நான் போகிறேன்” என்றான்.
“உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்” என்றாள் சிரித்துக் கொண்டே ஊர்மிளை.
“அப்படியே ஆகட்டும்.” எனக் கூறிச் சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது.
ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. இராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.
இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சி நம்க்கு விளக்குகிறது.