கால்பந்தின் மனக்குறை!
ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டது.
”நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்துக் கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்தப் பாகுபாடு?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டது.
உடனே இறைவன் சொன்னார், "நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல் தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்குக் கொடுத்து விடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால் தான் உன்னை எல்லாரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்.”
இந்தக் கதை சொல்கிற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்து விடும். ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதிந்து வைத்துக் கொள்ளும்.
-கலாபூஷணம் எம்.வை.எம். மீஆத், இலங்கை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.