அலீ (ரலி) அவர்கள் நான்காவது கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரிடத்திலே ஒரு இரட்டை வாள் இருந்தது. அது. அவரிடத்திலே இருந்தவரை அவரை யாராலும் வெல்லமுடிந்ததில்லை. அவ்விரட்டை வாள் எப்படியோ கை மாறி ஒரு யூதன் கைக்குப் போய்விட்டது.
அவ்வாள் தன்னிடம் இருந்தால் தன் பரம்பரைக்கே பெருமையாக அமையும் எனக் கருதி, அவ்வாளை மறைத்து விட்டான். ஆனால், நாட்டின் ஆட்சியாளரான கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கு வாள் இருக்கும் ரகசியம் தெரிய வருகிறது. அவர் நினைத்திருந்தால் தன் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களுக்குள் இரட்டைவாளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அவர் அறவே விரும்பவில்லை. பின் என்ன செய்தார்?
தன் வாளை முறைப்படி பெற நீதி மன்றத்தை அணுகுகிறார்.
“என் இரட்டை வாளை யூதர் ஒருவர் கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளார். அந்த வாளை, நீங்கள் விசாரித்து, வாங்கித் தர வேண்டும்"
என்று நாட்டையே ஆளும் கலீஃபா சாதாரண குடிமகனைப் போன்று நீதிமன்றத்தை அணுகி நீதி கேட்கிறார்.
அவ்வழக்கு மன்றத்தின் நீதிபதியாக ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வாதி, பிரதிவாதி இருவரை ஒருசேர வழக்கு மன்றம் அழைத்து விசாரணை நடத்துகிறார்.
யூதரிடம் இருப்பதாகக் கூறும் வாள் உங்களுடையது தான் என்பதற்கு ஆதாரம், சாட்சி கேட்கிறார் நீதிபதி ஹாரிஸ். உடனே அலீ (ரலி), “என் மகனை அழைத்துக் கேளுங்கள்” என்று கூறுகிறார்.
“தந்தையின் வழக்கில் பிள்ளையின் சாட்சியை ஏற்பதற்கில்லை” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்கிறார்.
வேறுவழியின்றி நீதிபதியின் தீர்ப்பை ஏற்று கலீஃபா அலீ (ரலி) வழக்கு மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்.
நாட்டை ஆளும் கலீஃபாவாக இருந்தும், சாதாரண குடிமகனைப் போல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும், போதிய சாட்சியமில்லா நிலையில் நீதிபதி தந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதும் யூதரின் மனச்சாட்சியை உறுத்தத் தொடங்கியது. கலீஃபா நினைத்திருந்தால் என்னை அடித்தோ உதைத்தோ வாளை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், சரியோ தவறோ நீதிக்கு மரியாதை கொடுத்த அலீ (ரலி) அவர்களின் செயல்பாட்டைக் கண்ணுற்ற யூதர், இவ்வளவு உயர்ந்த உத்தமரின் புகழ் மிக்க உடைமையான இரட்டை வாளை இனியும் தம் வசம் வைத்திருப்பது மிகக் கேடான செயலாகும். இதனால் நமக்கு நரகம்தான் கிடைக்கும் எனக் கருதி, மனச்சாட்சியின் உந்தல்படி, வாளை எடுத்து வந்து அலீ(ரலி) அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினார் யூதர்.
அலீ(ரலி) அவர்களின் செயல் யூதரின் மனச் சாட்சியைத் தூண்டுவதாக அமைந்தது.