பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின் கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி வைத்திருந்தார்கள்.
இழவுக்குப்போன இரண்டு பெண்களும் மாறி மாறி எதிர் எதிராக அமர்ந்த பல பெண்களோடு சேர்ந்து அழத் தொடங்கினர்.
அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப் பாகற்காய் காய்த்துத் தொங்குவதைப் பார்த்துவிட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, ராகம் இழுத்து, “பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்” என்று ஒப்பாரி வைத்தாள்.
இதைப் புரிந்துகொண்ட மற்றவள், “போகையிலேப் பார்த்துக்கலாம்; போகையிலேப் பார்த்துக்கலாம்” என்று ஒப்பாரியிலேயே பதில் சொன்னாள்.
இவர்களிருவரும் ஒப்பாரியிலேயே பேசிக்கொண்டதைக் கவனித்த வீட்டுக்காரி, நாம் சும்மாயிருந்தால் பாகற்காய்க்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, உடனே, ‘அது விதைக்கல்லோ விட்டிருக்கு, அது விதைக்கல்லோ... விட்டிருக்கு’ என்று ஒப்பாரியிலேயேப் பதிலுக்குப் பாடி முடித்தாள்.
இது கேட்ட இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்து, தம் முயற்சி பலிக்காமல் ‘கணவனைப் பறி கொடுத்தவளுக்குப் பாகற்காயைப் பறிகொடுக்க மனமில்லையே’ என்று புலம்பிக் கொண்டே, வீடு வந்து சேர்ந்தனர்.