ஒரு ஆமை தண்ணீரில்லா காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. காட்டிற்கு வேட்டையாட வந்தவர்களின் கண்ணில் அது பட்டுவிட்டது.
தண்ணீரைத் தேடி அந்த ஆமை அலைந்துகொண்டிருந்தது. ஆமையை பிடித்து சென்றவர்கள் அதை ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய நீரை விட்டு அதில் அதை போட்டார்கள்.
நீரில் விடப்பட்ட ஆமை தண்ணீரில் சுற்றிச்சுற்றி ஆனந்தமாக வந்தது. பாத்திரத்தை தூக்கி அடுப்பின் மீது வைத்து அதன் கீழே தீயை மூட்டினார்கள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடாகி கொதிக்கத் துவங்கியதும், அதில் போடப்பட்ட ஆமை துடித்தது. முடிவில் இறந்தது.
வேட்டையாடியவர்களின் வயிற்றுக்குள் சென்று அவர்களின் உணவாகிப் போனது.
இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன?
ஆமை என்பது நம் உயிர் தங்கியுள்ள இந்த உடல் ஆமைக்கு ஒரு தலையும் நான்கு கால்களும் இருப்பதுபோல் நமக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. ஐம்புலன்களின் மூலமாகத்தான் நாம் இந்த உலகோடு தொடர்பு கொண்டு இன்பங்களை அனுபவிக்கின்றோம். அதே போல் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். இன்பங்களை அனுபவிக்கும்போது மகிழ்கின்றோம். துன்பங்களை அனுபவிக்கும் போது வருத்தப்படுகின்றோம்.
புலன்களை கட்டுபடுத்திக் கொண்டால் துன்பங்களில் சிக்காது மகிழ்ச்சியாய் வாழலாம். புலன்கள் வழி சென்றால் துன்பத்தில் சிக்கி மரணமடைவது நிச்சயம் என்பதைத்தான் இந்த ஆமையின் கதை நமக்கு காட்டுகிறது.