ஓர் ஏரியில் நீர்ப்பாம்பு ஒன்று வசித்து வந்தது. அது சில சமயங்களில் ஏரியை அடுத்தாற் போலிருந்த புல் தரைக்கு வரும். சிறிது நேரம் புற்களின் ஊடே ஊர்ந்து சென்று காற்று குடிக்கும். பிறகு ஏரிக்குத் திரும்பி விடும்.
ஒரு நாள் புல் வெளியில் அது ஊர்ந்து செல்லும் போது, எதிரில் ஒரு நாகப்பாம்பைக் கண்டது.
ஒன்றையொன்று சந்தித்தவுடன் இரண்டும் அன்பாகப் பேசிக் கொண்டன. நலம் விசாரித்துக் கொண்டன.
அப்போது தூரத்தில் இருந்த மூங்கில்களின் ஊடே காற்று மோதியதால் இனிய ஓசையெழுந்தது. அந்த இன்னோசையைக் கேட்டவுடன், நாகப் பாம்புக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்பத்தின் எக்களிப்பில் அது படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதன் அழகிய ஆட்டத்தைக் கண்கொட்டாது பார்த்து நீர்ப்பாம்பும் மகிழ்ந்தது.
அன்று முதல் அவையிரண்டும் நண்பர்களாகி விட்டன. அடிக்கடி ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. பேசிக்கொண்டே ஒன்றாக ஊர்ந்து பல இடங்களுக்குச் சென்றன.
ஒரு நாள் அவையிரண்டும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஓர் ஒற்றையடிப் பாதை இருந்தது.
சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நீர்ப்பாம்பு அந்தப் பாதையின் மீதே படுத்துக் கொண்டது.
நாகப்பாம்போ புற்களின் ஊடே சென்று மறைவாகப் படுத்துக் கொண்டது.
"ஏன் போய் ஒளிந்து கொள்கிறாய் ?’ என்று நீர்ப்பாம்பு கேட்டது.
"இந்த ஒற்றையடிப் பாதையில் மனிதர்கள் வருவார்கள். என்னைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார்கள்" என்றது நாகப்பாம்பு.
"நான் எத்தனையோ முறை அவர்கள் போகும் பாதைகளில் படுத்திருக்கிறேன். என்னை யாரும் அடிக்கவில்லையே" என்று வியப்புடன் கூறியது நீர்ப்பாம்பு.
உன்னிடம் நஞ்சில்லை. என்னிடம் நஞ்சு இருக்கிறது நான் கடித்தால் அவர்கள் இறந்து விடுவார்கள். அதனால், என்னை அவர்கள் பகையாகக் கருதுகிறார்கள். கண்ட இடத்தில் கொன்று விடுவார்கள்’’ என்று கூறி, மறைவான இடத்தி லேயேப் படுத்துக் கொண்டது, நாகப்பாம்பு.
நல்ல மனம் படைத்தவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள். நெஞ்சில் வஞ்சங் கொண்டவர்கள்தான் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள். நஞ்சுள்ள நாகப்பாம்பு போல் அவர்கள் மனித இனத்தின் பகையாவார்கள்.