மிகப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் வீரன்; மற்றொருவன் பெயர் சூரன். வீரனும் சூரனும் ஆற்றல் மிக்கவர்கள். மலை ஏறுவதிலும் மரம் ஏறுவதிலும் வல்லவர்கள். நீச்சற்கலையில் நிகரற்றவர்கள். வேல் வீசுவதிலும், வில் வளைப்பதிலும், வாள் சுழற்றுவதிலும் அவர்களையொப்பவர்கள் யாரும் கிடையாது.
வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்தோடும் சமயங்களில் கூட அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அக்கரைக்கு நீந்திச் சென்றிருக்கிறார்கள். ஏரி குளங்களில் நீந்துவது அவர்களுக்கு மிக எளிய கலை. இந்திர விழாவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில், எத்தனையோ முறை அவர்கள் முதற்பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
பாண்டி நாடு முழுவதும் அவர்கள் புகழ் பரவியிருந்தது. வெளிநாடுகளிலும் தங்கள் திறமையைக் காட்டி விருது பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த எண்ணத்தைச் செயற்படுத்த அவர்கள் ஒரு நாள் பயணம் புறப்பட்டு விட்டார்கள்.
நாடு நாடாகச் சுற்றி அவர்கள் நல்ல பெயரும் புகழும் பெற்றார்கள்.
ஒருமுறை கடற்கரை அருகில் இருந்த ஒர் ஊருக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். புகழ்பெற்ற நீச்சல்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டார்கள்.
"எங்களோடு போட்டி போட்டு நீந்தக்கூடிய இளைஞர்கள் இந்த ஊரில் யாராவது இருக்கிறார்களா?' என்று அவர்கள் சவால் விட்டார்கள். அவர்களோடு போட்டி போட பத்து இளைஞர்கள் முன் வந்தார்கள்.
போட்டி நடத்த ஏற்பாடாயிற்று. அவ்வூரில் ஒடிய ஆற்றின் ஒரு கரையில் உள்ள ஒரு துறைக்கு நீந்திச்செல்ல வேண்டும். நீச்சல்காரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நீந்தத் துவங்கினார்கள்.
மக்கள் கூட்டம் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல் வீரனும் சூரனுமே முதலில் நீந்திச் சென்று அக்கரை சேர்ந்தார்கள்.
அவர்களுக்கு மக்கள் பலப்பல பரிசுகளை அள்ளி வழங்கினார்கள்.
இவற்றையெல்லாம் கண்டு தோற்றுப்போன இளைஞன் ஒருவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று.
அவன் அவர்களை நோக்கிக் கூறினான், "ஆற்றைக் கடந்த விட்டீர்கள்! இது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. உங்களால் கடலைக் கடக்க முடியுமா?’’
கடலா? அது என்ன?’ என்று வியப்புடன் வீரனும் சூரனும் கேட்டனர். அவர்கள் அதற்கு முன் கடலைப் பார்த்ததேயில்லை.
"கடலுக்குக் கரையே கிடையாது” என்று ஒரு பெரிய மனிதர் கூறினார்.
கரையில்லாமல் ஒரு நீர்நிலை உலகத்தில் இருக்க முடியாது. சரி, கடலை எங்களுக்குக் காட்டுங்கள், பார்க்கலாம்” என்று வீரனும் சூரனும் கேட்டனர்.
ஊர்மக்கள் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.
"கண்ணுக்கெட்டிய மட்டும் கரையே தென்படவில்லையே இதுதான் கடலா !” என்று வியந்தான் வீரன்.
“அதற்கும் அப்பால் கரையிருக்கும்” என்று உறுதியான குரலில் கூறினான் சூரன்.
"அப்பால் உள்ள கரைக்கு நீந்திச் சென்று திரும்பிவர உங்களால் முடியுமா?’ என்று கேட்டான் தோற்றுப் போன இளைஞன்.
"எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறிக்கொண்டே கடலில் குதித்து நீந்தினர் வீரனும் சூரனும்.
"வீரனே! சூரனே ! வேண்டாம், வேண்டாம் ! திரும்பிவிடுங்கள்!” என்று ஊர்ப்பெரியவர்கள் கூவியழைத்தனர். ஆனால், கூக்குரல்களையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.
அகன்று பரந்த கடலில் பச்சையலைகளினிடையே அவர்கள் சிறிதும் அஞ்சாது நீந்திச் சென்றனர். எவ்வளவு நேரம் நீந்தியும் அவர்கள் மறு கரையைக் காணமுடியவில்லை.
கரையில் நின்ற மக்கள் இனி அவர்கள் திரும்பமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு கலைந்து சென்றுவிட்டார்கள்.
நெடுநேரம் நீந்திய பிறகு அவர்கள் கைகள் அலுத்துப் போயின. இனி என்ன செய்வதென்று வீரன் கலங்கினான்.
அப்போது அவ்வழியாக ஒரு மீன் பிடிக்கும் படகு வந்தது. வீரன் அதைக் கூவி அழைத்தான்.
படகில் இருந்தவர்கள், வீரன் வந்த பக்கம் படகைத் திருப்பி ஓட்டி வந்தார்கள்.
வீரன் படகில் ஏறிக்கொண்டான். அவர்களை வேண்டிக்கொண்டு சூரன் நீந்திவரும் பக்கமாகப் படகை ஒட்டச் சொன்னான்.
படகு சூரனை நெருங்கியதும், வந்து ஏறிக் கொள்ளும்படி வீரன் அவனைக் கூப்பிட்டான்.
"அக்கரையைக் காணாமல் நான் திரும்ப மாட்டேன்" என்று கூறிச் சூரன் மறுத்துவிட்டான்.
படகுக்காரர்கள் எவ்வளவோ கூறியும் சூரன் அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை.
அவன் தன் போக்கில் நீந்திக்கொண்டே சென்றான். தங்கள் சொல்லை அவன் கேட்கவில்லை என்றதும், படகுக்காரர்கள் கரை நோக்கித் திரும்பினார்கள்.
சூரன் கையில் வலுவிருக்கும் வரை நீந்திக் கொண்டேயிருந்து கடைசியில் தண்ணிரில் மூழ்கி இறந்து போனான்.
படகில் திரும்பி வந்த வீரனைக் கடலில் அவ்வளவு தூரம் அஞ்சாமல் நீந்திச் சென்றதற்காக ஊர்மக்கள் பாராட்டிப் பேசினார்கள்.
திரும்பி வராமல் உயிர்விட்ட சூரனையோ அறிவில்லாதவன் என்று ஏசினார்கள். வீரன் தன் பரிசுப் பொருட்களுடன் வீடு திரும்பினான்.
துன்பப்படும் காலத்தில் கிடைக்கும் துணையை உதறித் தள்ளிவிடக் கூடாது.