"காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி" என்று சொல்வார்கள். இங்கு, 'கருணைக்கு அருணகிரி' என்று எப்படி வந்தது? என்பதற்கும் ஒரு கதை சொல்வார்கள்.
வில்லிபுத்துாரரும், அருணகிரிநாதரும் ஒரு சமயம் வாதம் செய்தார்கள். யார் அந்த வாதத்திலே வெற்றி பெறுகிறாரோ அவர் தோற்றவருடைய காதை அறுப்பது என்பது நிபந்தனை.
வில்லிபுத்துரர் இப்படிப் பல பேர்களைத் தோல்வியுறச் செய்து அவர்களுடைய காதை அறுத்துக் கொண்டே வந்தாராம்.
அவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவே அருணகிரிநாதர் அவரோடு வாதத்திற்குச் சென்றார். கடைசியில் அருணகிரிநாதரே வென்றார்.
வில்லிப்புத்தூரர் தம் காதை அருணகிரிநாதரிடம் நீட்டி, தாம் தோற்றுப் போய்விட்டதால் அறுக்கும்படியாகச் சொன்னாராம்.
அருணகிரிநாதர், அவர் காதை அறுக்காமல், "என் பாட்டுக்குக் காதை நீட்டினதேப் போதும்" என்று சொல்லிவிட்டாராம்.
அதனாலே கருணைக்கு அருணகிரி என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள்.