நபிகள் நாயகம் (சல்) அவர்களை நேரில் கண்டு, மார்க்கம் பற்றி விவாதிக்க ஒரு குழுவினர் அண்ணலார் இருப்பிடம் வந்தனர். அக்குழுவில் முரட்டு சுபாவமுள்ள மூர்க்கன் ஒருவனும் இருந்தான்.
அக்குழுவினர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நன்றாக இருட்டி விட்டது. அதற்குமேல் அக்குழுவினர் தங்கள் ஊர் போய் சேருவது கஷ்டம். எனவே, பெருமானார் அவர்கள், அக்குழுவில் இருந்தவர்களை அங்கிருந்த முஸ்லிம் குடும்பத்திற்கு ஒருவர் வீதம் அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று பணித்தார்கள். அவ்வாறே அழைத்துச் சென்றனர்.
ஆனால், அந்த முரட்டு மனிதனை யாரும் அழைத்துச் செல்ல விரும்பாததால், அவன் மட்டும் தனித்து விடப்பட்டான். நிலைமை உணர்ந்த பெருமானார் அம்முரடனைத் தன் விருந்தாளியாக அழைத்துச் சென்றார்கள்.
பெருமானார் (சல்) அவர்களின் வீடு நோக்கி நடக்கும்போதே அம்மூர்க்கன் தன் மனதுக்குள் 'இன்று பெருமானார் வீட்டிலுள்ள அத்தனை உணவுகளையும் உண்டு, வீட்டிலுள்ள அனைவரையும் பட்டினி போட வேண்டும்' என எண்ணியவனாய் பெருமானார் இல்லத்துள் புகுந்தான்.
பெருமானார் குடும்பத்துக்கு என அன்று சமைத்து வைத்திருந்த உணவு வகைகளையெல்லாம் பெருமானார் அம்முரடனுக்கு அன்போடு உண்ணக் கொடுத்தார்.
அக்குடும்பத்தினரும் உண்ண வேண்டுமே என்ற எண்ணம் அறவே இல்லாதவனாக, அக்குடும்பத்தினர் அனைவரையயும் பட்டினி போட வேண்டும் என்ற வஞ்சக உணர்வோடு கொஞ்சமும் மீதம் வைக்காமல் தின்று தீர்த்தான். பெருமானாரும் குடும்பத்தவர்களும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் விருந்தளித்தனர்.
வந்த விருந்தாளி உண்ட களைப்புத் தீர, உறங்க உயர்தர படுக்கை விரிப்புகளை விரித்து உறங்கச் செய்தனர். மகிழ்ச்சிப் பெருக்கோடு உறங்கச் சென்ற அத்துவுடன் அளவுக்கதிகமாக உண்டதால் செரியாமைக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டான்.
நள்ளிரவில் வாந்தி, பேதியால் அவ்வறையை நாசப்படுத்தினான். விடிவதற்குள் வெளி யேறி ஓடி விட வேண்டும் என எண்ணி, விடியுமுன் வெளி யேறினான். அவன் நீண்டதுரம் வந்தபின்பே நன்றாக 2 விடிந்தது. அப்போதுதான் தான் தங்கியிருந்த அறையில் தன் போர்வாளை வைத்துவிட்டு, வெறுங்கையோடு ஓடிவந்தது நினைவுக்கு வந்தது. உடல் நலிவும் வெளியேற வேண்டும் என்ற சங்கட நிலையும் அவனுக்கு வாளைப்பற்றிய சிந்தனை இல்லாமல் செய்துவிட்டது.
விலைமதிப்புள்ள அவ்வாளை இழக்க அவன் உள்ளம் சம்மதிக்கவில்லை. எவ்வாறாயினும் போர்வாளை மீண்டும் பெற்றே தீருவது என்ற எண்ணத்தில் தான் இரவு தங்கியிருந்த அண்ணலார் வீடு நோக்கி ஓடி வந்தான்.
பொழுது விடிந்ததும் விருந்தாளி தங்கியிருந்த அறையை வந்து பார்த்தார் அண்ணலார் (சல்) அவர்கள். அங்கு யாரும் இல்லாததோடு அறை, படுக்கை, விலையுயர்ந்த விரிப்பு, போர்வை எல்லாமே வாந்தி, பேதியால் மிகவும் அசுத்தமாகக் கிடந்தன.
இரவு விருந்தாளிக்கேற்பட்ட சுகக் கேட்டை எண்ணி வருந்தியவராக அறையைச் சுத்தப் படுத்தி, அசுத்தமாகிவிட்ட போர்வையைத் துவைக்க எடுத்துச் சென்று சுத்தப்படுத்தலானார்.
இந்நிலையில் வாளை மீண்டும் எடுத்துச் செல்ல பெருமானார் இல்லத்தை முரடன் அணுகியபோது அங்கே அண்ணலார் முரடனால் அசுத்தப்படுத்தப்பட்ட விரிப்புகளையும் போர்வைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
அக்காட்சி அவனை மிகவும் வருத்திவிட்டது.
விருந்தாளி திரும்ப வந்திருப்பதைக்கண்ட அண்ணலார் (சல்) அவர்கள் விரைந்து சென்று விருந்தாளியை அணுகி, “நண்பரே! இரவு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது எப்படி இருக்கிறீர்கள். உங்கள் உடல் சீர்பட மருந்து வைத்திருக்கிறேன். உண்டு இளைப்பாறிச் செல்லலாம். நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போனவாள் இதோ எடுத்து வருகிறேன்” என்று கூறிச் சென்று மருந்தையும் வாளையும் எடுத்து விரைந்து வந்தார்.
பெருமானார் (சல்) அவர்களின் பேச்சும் செயலும் அம்முரடனின் மனதை வெகுவாக நெகிழச் செய்துவிட்டது.
தன் செயலுக்காக வெட்கமும் வேதனையும் அடைந்தான். மனித நேயத்தின் சிகரமாக இருக்கும் இம் மாமனிதரைத் தவறாக எண்ணியதற்காக மனதிற்குள் குமைந்தான்.
தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான். இஸ்லாத்தில் இணைந்து தன்னையும் மனிதப் புனிதனாக மாற்றிக் கொண்டான்.
இச் செயல் மனித நேயத்திற்கோர் மகத்தான சான்றாக இன்றும் அண்ணலார் வாழ்வில் மின்னிக் கொண்டுள்ளது.