வயது முதிர்ந்த மூதாட்டியொருவர் குடும்பக் கவலைகளால் மிகவும் துவண்டு போய் நின்றார்.
தன் மனக் கவலைகளை யாரிடமாவது சிறிது நேரம் இறக்கிவைத்து இளைப்பாற விரும்பினார். இவரது மனக்கவலைகளைக் காது கொடுத்துக் கேட்க யாருமே தயாராக இல்லை.
அதனால் மன பார அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் அவ்வழியாகப் பெருமானார் (சல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
அவரது நல்லியல்புகளை நன்குணர்ந்திருந்த மூதாட்டி, அவரையே தன் கவலைகளை-மன உளைச்சல்களை இறக்கி வைக்க ஏற்றதொரு சுமைதாங்கியாகக் கருதி அவரிடம் தன் கவலைகளை விவரிக்கத் தொடங்கினார்.
வழி நெடுக அவைகளைப் பொறுமையாகக் கேட்டதோடு அப்பிரச்சினை, கவலைகளுக்குத் தீர்வும் சொல்லிக் கொண்டு வந்தார். நீண்ட நேரம் தன் மனச்சங்கடங்களைப் பொறுமையாகக் கேட்டு தீர்வு சொன்ன அண்ணலாரின் செயல் அம் மூதாட்டிக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது.
மனச் சுமைகளை இறக்கி வைத்தவராக, லேசான மனதுடன் நன்றி கூறிச் சென்றார்.
அதைக் கண்ணுற்ற நபித் தோழர்கள் 'இம் மூதாட்டியின் புலம்பல்களுக்கு இவ்வளவு பொறுமையோடு பதில் கூற வேண்டுமா?’ என்றபோது, “வயதான அம் மூதாட்டி தன் மனச்சுமைகளை இறக்கி வைக்கத் துடிக்கின்ற போது, அவள் சகோதரனாகிய நான் ஏன் இரு கரமேந்தி வாங்கிக் கொள்ளக் கூடாது? நம்மால் பிறருக்கு மகிழ்வும் மனச்சாந்தியும் தரமுடியும் என்றால் நாம் ஏன் அதை அவர்கட்கு வழங்கக் கூடாது?” எனக் கூறி மனித நேயத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டி, பின்பற்றத் தூண்டினார்கள்.
பிறருக்குத் துணையாக, ஆதரவாக இருப்பது மட்டுமே மனித நேயமாகிவிடாது.
முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் எந்நிலையிலும் யாருடைய மனமும் புண்படாமல் நடந்து கொள்வதும் மனித நேயத்தின்பாற்பட்டதுதான் என்பது நபி வழியாகும்.