மகான் ஒருவரிடம் வந்த ஒரு பக்தன், “சுவாமி நான் மனதார எந்தத் தவறும் செய்வதில்லை. பிறருக்கு எந்தக் கெடுதியும் நினைப்பதில்லை. எனது மனது தூய்மையாக உள்ளது. எனக்குத் தங்களுடைய உபதேசம் தேவைதானா?” என்று கேட்டான்.
“மகனே நீ எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து இரண்டு நாட்கள் இரு. அதன் பின் வா. உபதேசம் தேவையா? இல்லையா? என்று உனக்குத் தெரிந்துவிடும்” என்றார் மகான்.
அவர் சொன்னபடியே இரண்டு நாட்கள் கழித்து வந்தான் பக்தன்.
“மகனே உன் ஆடைகளில் ஏன் இவ்வளவு தூசு படிந்துள்ளது? உன் முகத்திலெல்லாம் அழுக்கு படிந்து கிடப்பதைப் பார். எந்த வேலையும் செய்யாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து இருக்கும் போதே, உன்மேல் இவ்வளவு மாசு படிந்திருக்கிறதே, உன் மனதிலும் அப்படித்தான் அவ்வப்போது தேவையில்லாத அழுக்கு படிந்துவிடும். அதற்கு நல்ல எண்ணங்களை மனதுக்குள் எப்போதும் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் அந்த மகான்.
அதைக் கேட்ட அந்த பக்தன், அந்த மகானின் சீடனானான்.