நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள் குருகுலக் கல்வியை முடித்துவிட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் தொடங்கினர்.
ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார், திருமணம் முடிந்து இல்லற தர்மத்தில் ஈடுபட்டார்.
மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார். தேச சஞ்சாரம் செய்தார்.
காலச்சக்கரம் உருண்டோடியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி, ஊர்க்கோவிலில் தங்கி, தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.
கடமையைக் கண்ணாகக் கருதிய இல்லறத்தார் விவசாயப் பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன், துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் மனவியிடம் சொன்னார். அறுசுவை உணவு சமைத்து, துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப் போனாள். காரணம் எங்கோ பெய்த கனத்த மழையால் அவ்வூர் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு. அக்கரையிலுள்ள கோவிலை அடைவது எப்படி? என்று கணவனிடம் வந்து கேட்டாள்.
‘பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று ஒரு வழியைச் சொன்னார் இல்லறத்தார்.
என்ன ஆச்சரியம்! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல, ஆறு வழிவிட்டது. அக்கரை சென்றடைந்தாள்.
தன் கணவரின் செய்தியைக் கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள். ரசித்து, ருசித்து உண்ட சந்நியாசி அவளுக்கு ஆசி கூறியனுப்பி வைத்தார்.
ஆற்றில் அதே வெள்ள ஓட்டம். தன் கணவர் சொன்ன அதே மந்திரத்தை உச்சரித்தாள். ஆறு வழிவிடவில்லை; செய்வதறியாது திகைத்த அப்பெண் துறவியை அணுகி என்ன செய்வது? எனக் கேட்டாள்.
‘உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற, அப்படியேச் செய்தாள்.
ஆஹா, ஆறு வழி விட, இக்கரை சேர்ந்தாள்.
இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா? குழம்பிய அவள் தன் கணவரிடமே கேட்டாள்.
புன்முறுவலுடன் கணவர் பதில் சொன்னார்.
“காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல், வம்சவிருத்திக்காக முறையாக உறவு கொள்ளும் இல்லறத்தானும், வாய் ருசிக்காக உணவுக்கு அடிமையாகாமல் உணவை ருசிக்கும் துறவறத்தானும் ஒரு வகையில் ஆன்ம பலம் (தவ ஆற்றல்) கொண்டவர்களே...”