தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர்.
அவன் மூளையிலே ஒரு தேரை இருந்தது. அதனைக் கையால் எடுக்க முயன்றார் அகத்தியர். ஆனால், அது வரவில்லை. அவன் மூளையை அந்தத் தேரை காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயலவில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்த போது, அவர் அருகில் இருந்த மாணாக்கர்களில் ஒருவர், கொட்டாங்குச்சியிலே (சிரட்டையிலே) நீரைக் கொண்டு வந்து தேரையின் முன்னேக் காட்டினார். அது அவனின் மூளையை விட்டுத் தண்ணிரிலேத் தாவிக் குதித்தது.
நோயாளிக்கு வலியும் தீர்ந்தது.
அகத்திய முனிவருக்குப் பெரிதும் வியப்பு, நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை முடித்து அனுப்பி வைத்தார்.
அதிலிருந்து அகத்தியரின் அந்த மாணக்கர்க்கு ‘தேரையர்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.
தம்மை விடத் தம் மாணாக்கர் சிறந்திருப்பதா? அதை விரும்பாத அகத்தியரும், வடக்கே வெகு தொலைவில் உள்ள ஊருக்குத் தேரையரை மருத்துவம் செய்ய அனுப்பி விட்டார்.
ஆண்டுகள் பல கடந்தன.
தன் மாணாக்கர் (தேரையர்) இன்னும் உயிரோடு இருக்கின்றாரா என்று அறிய விரும்பிய அகத்தியர், அதனை அறிந்து வரும்படி மற்றொரு மாணவரை அனுப்பினார்.
அவர் மாணவரிடம், “போகும்போது, நீ சாலையிலே போகு ம் வழியில் இருக்கும் புளியமர நிழலில் தங்கி இளைப்பாறு, புளியங்குச்சியால் பல் துலக்கு, புளிய விறகைக் கொண்டு சமைத்து உண்டு செல்” என்றார்.
அம்மாணவரும் குருவின் கட்டளைப்படியே முப்பது நாளாக நடந்து சென்று தேரையர் இருப்பிடம் சென்று சேர்ந்தார்.
தன்னைக் காண வந்தவர் எலும்பும் தோலுமாக உடல் இளைத்திருப்பது கண்டு ‘என்ன காரணம்?’ என்று தேரையர் அவரை விசாரித்தார்.
அவர் அகத்தியர் சொல்லியனுப்பிய முறையை (புளியங்கதை) சொன்னார்.
தேரையர் அவருக்கு ஆறுதல் கூறி, தன் வணக்கத்தை அகத்தியருக்குத் தெரிவிக்கும்படி சொன்னார்.
அவர் புறப்படும் போது, “நீ இப்போது வேப்பமர நிழலில் தங்கி இளைப்பாறு, வேப்பங்குச்சியால் பல் துலக்கு, வேப்ப விறகு கொண்டு சமைத்து உண்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
திரும்பும் போது அவரும் அப்படியே செய்து கொண்டு நடந்து அகத்தியரை பார்த்தார். அவரிடம் பேச வாயைத் திறந்தார் அந்த மாணவர்.
அதற்குள் அகத்தியர், மாணவரை நோக்கி, “நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாம், தெரியும். தேரையர் உயிரோடு இருக்கிறான். நன்றாகவும் இருக்கிறான். மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறான். நீ அவனைக் காணும்போது மிகவும் இளைத்திருந்தாய், காணாவிட்டால் திரும்பி இங்கே வந்திருக்க மாட்டாய், இறந்திருப்பாய். அவன் சொல்லித்தானே. வேப்பமர நிழலில் தங்கி, வேப்பங்குச்சியால் பல்துலக்கி, வேப்ப விறகால் சமையல் செய்து உண்டு நலமாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்” என்றார்.