ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில் ஒரு பெண்ணைக் காதலித்தான். பலத்த எதிர்ப்புக்கிடையே அவளைத் திருமணமும் செய்து கொண்டு, பெற்றோருடனேயே நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தான்.
அந்தச் சமயத்தில் ஒருநாள், அத்தாசிப் பேண்ணின் பழைய காதலன் அவளிருப்பிடத்தை எப்படியோ கேள்விப்பட்டு அறிந்து யாருமில்லா நேரம் பார்த்து அவள் வீட்டிற்கு வந்து, அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது, அங்கு கூடத்தில் கட்டியிருந்த எருமை மாடு தலையை வேகமாக ஆட்டி ‘ம்மா’ என்று கத்தியது.
வந்தவன் உடனே பயந்து, இது எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ஓடியேப் போய்விட்டான்.
உடனே தாசிப்பெண் எருமைமாட்டின் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினாள், “இந்தா, இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினாள்.
அந்த நேரத்தில் வந்த அவள் கணவன், அதைப் பார்த்துவிட்டுக் காரணம் கேட்டான்.
அவளும் ‘பழைய சிநேகன் ஒருவன் வந்தான் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன்’ என்ற செய்தியைச் சொல்லி விட்டாள்.
உடனே அவனும், நம் குடும்பக் கெளரவம், பேர் எல்லாம் கெட்டுப்போகுமே என்று கருதி, “இதை யாரிடமும் சொல்லாதே” என்று எருமையின் மற்றொரு காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
வெளியே போயிருந்த தாயும் தந்தையும் வரவே, அவர்களும் இதுவெல்லாம் என்னவென்று மகனை விசாரித்து, செய்தியைத் தெரிந்து கொண்டதும், “ஐயோ! எங்கள் மானமேப் போகிறதே. எங்களைக் காப்பாற்று” என்று எருமையின் மற்ற இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்கள்.
எருமை மிரண்டு போய்க் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது.
நம்ம வீட்டு எருமை ஊரெல்லாம் போய்ச் சொல்லி விடுமே என்று பயந்து, நாலுபேரும் கூடி என்ன செய்வது என ஆலோசித்தனர்.
உடனே ஒரு தமுக்கு அடிப்பவனைக் கூப்பிட்டு, “எங்க வீட்டு எருமை கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டது. அது எங்கள் மருமகள் அயலான் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தவறாக வந்து சொல்லும். அது உண்மையல்ல. அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று ஊர் முழுவதும் நன்றாகப் பறை அறைந்து சொல்ல ஏற்பாடு செய்தனர்.
எப்படி இச்செய்தி ஊர் முழுக்கப் பரவியது பாருங்கள்!