சண்பகவனம் என்று ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மான் குட்டி இருந்தது. அந்த மான் குட்டியுடன் ஒரு காகம் நட்பாய் இருந்து வந்தது. ஒரு நாள் காகம் இரை தேட எங்கோப் பறந்து சென்றது, அப்பொழுது மானும் ஓரிடத்தில் இளம் பச்சைப் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. நாள்தோறும் நல்ல இளம் புல்லை மேய்ந்து திரிந்ததால், அந்த மான் குட்டி கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது.
புல் மேய்ந்து கொண்டிருந்த அந்த மான் குட்டியின் உடலைக் கண்ட ஒரு நரி, அதைக் கொன்று தின்ன வேண்டும் என்று ஆசை கொண்டது. அந்த அழகான மான் குட்டியைக் கண்டவுடனே அதன் நாக்கில் எச்சில் ஊறியது. மானைக் கொன்று தின்ன அது ஒரு தந்திரம் செய்தது.
மானின் அருகிலே போய், 'என் நண்பா, நலம்தானே?’ என்று பேச்சைத் தொடங்கியது.
‘நீ யார்? உன்னை நான் இதற்கு முன் பார்த்ததாகவே நினைவில்லையே! நீயோ என்னைத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே?’ என்று மான் அந்த நரியைக் கேட்டது.
“மானே, நானும் இந்தக் காட்டில்தான் வாழ்கிறேன். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு உறவினர் யாரும் கிடையாது. தன்னந்தனியாக ஒரு துணையும் இல்லாமல் வீண் வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று உன்னைக் கண்ட பிறகுதான் என் மனத்தில் மகிழ்ச்சி தோன்றியது. உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டு, உன்னிடமே இருந்துவிட முடிவு செய்து விட்டேன். என்னிடம் நீ இரக்கம் காட்டி அன்பாக நடந்து கொள்ள வேண்டுகிறேன்” என்று நரி பதிலளித்தது.
நரியின் தந்திரமான பேச்சைக் கேட்டு அந்தக் களங்கமில்லாத சின்ன மான்குட்டி மயங்கி விட்டது. அது கூறியதெல்லாம் உண்மையென்று எண்ணி அதைத் தன் நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டது. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து சண்பக மரத்தினடியில் போய் இருந்தன.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்து சேர்ந்த காகம் மான் குட்டியைப் பார்த்து, 'மானே, உன்னுடன் புதிதாக வந்து தங்கியிருப்பவன் யார்?’ என்று கேட்டது.
'காக்கையண்ணா, இந்த நரி என்னோடு நட்பாயிருக்க வந்திருக்கிறது. மிகவும் அன்பாகப் பேசுகிறது!’ என்று மான் குட்டி கூறியது.
“மானே, புதிதாக வந்தவர்களை உடனே நம்பி விடக் கூடாது. ஒருவனுடைய குலமும் முன் நடத்தைகளும் தெரியாமல், அவனுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அப்படி இடங்கொடுத்தால், பூனைக்கு இடங் கொடுத்து மடிந்த கழுகைப் போலத் துன்பமடைய நேரிடும்’ என்று காகம் கூறியது.
அதைக் கேட்ட நரி காகத்தைப் பார்த்து, ‘ஏ காகமே, நீ இந்த மானோடு நட்புச் செய்யும் முன்பு உன்னுடைய குணம் என்னவென்று ஆராய்ந்தா இது நட்புக் கொண்டது? நீங்கள் இருவரும் இப்போது உண்மையான நண்பர்களாய் இல்லையா? அது போல ஏன் என்னையும் கருதக் கூடாது? என்று மிகவும் தந்திரமாகக் கேட்டது.
இதைக் கேட்ட மான்குட்டி, நரி சொல்வது சரிதான் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டது. அது காக்கையைப் பார்த்து காக்கையண்ணா, ஒருவனை நாம் புதிதாகப் பார்க்கும் போது அவனிடம் நம்பிக்கையுண்டானால் போதாதா? அவனைப் பற்றி யாரிடம் போய் நாம் விசாரிக்க முடியும்? அது ஆகிற காரியமா? இது நம்மோடு இருக்கட்டும்’ என்று நரிக்காகப் பரிந்து பேசியது.
கடைசியில் காக்கையும் அரைகுறையான மனத்தோடு சரியென்று ஒப்புக் கொண்டது. அதன் பின் அவை மூன்றும் ஒன்றாக வாழ்ந்து வந்தன.
ஒருநாள் நரி மான் குட்டியைப் பார்த்து, 'ஓரிடத்தில் அருமையான பயிர் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கிறது, வா, உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூப்பிட்டது.
மான் அதன் கூடப் போய் நன்றாக வளர்ந்திருந்த அந்தப் பயிரை மேய்ந்து பசி போக்கிக் கொண்டது. நாள்தோறும் அந்தப் பயிர்க் கொல்லைக்குப் போய் மான் மேய்ந்து வரத் தொடங்கியது.
தான் விதைத்து வளர்த்த பயிர் அழிந்து வருவதைக் கண்ட கொல்லைக்காரன், தன் பயிர்க் கொல்லையில் வலை கட்டி வைத்திருந்தான். வழக்கம் போல் மேயப்போன மான், அந்த வலையில் சிக்கிக் கொண்டது.
‘என் உயிருக்குயிரான காகமோ நரியோ வந்தாலொழிய என்னால் பிழைக்க முடியாதே’ என்று தயிரில் சுத்தும் மத்தைப் போல் மான் குட்டி மனத் துயரத்தோடு துடித்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்தப் பக்கமாக வந்த நரி, மான் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என் நெடு நாளைய எண்ணம் இன்று நிறைவேறிற்று. இன்று நான் நிச்சயமாக இந்த மானின் எலும்பையும் தசையையும் சுவைத்துத் தின்பேன்” என்று மனம் மகிழ்ந்திருந்தது.
மான்குட்டி அதைக் கண்டவுடன், ‘நரியண்ணா, நரியண்ணா! விரைவில் என்னை விடுவியுங்கள்’ என்று கதறியது.
“மானே, இன்று எனக்கு நோன்பு நாள். இந்த வலை தோல் வலையாக இருப்பதால், இன்று நான் இதைத் தொடவும் கூடாது. நாளைக்கு நான் நிச்சயம் இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றுகிறேன். ஒரு நண்பனுக்காக நான் உயிர் விடவும் தயாராயிருக்கிறேன்’ என்று வஞ்சகமாகப் பதில் கூறியது அந்த நரி.
பிறகு கொல்லைக்காரன் வந்து மானைக் கொன்று போடும் நேரத்தை எதிர்பார்த்து ஒரு செடி மறைவில் பதுங்கிக் காத்திருந்தது.
பகலெல்லாம் இரை தேடித் தின்று விட்டு இரவு சண்பக மரத்துக்கு வந்த காகம் அங்கு மான் குட்டியை காணாமல் மனம் கலங்கியது. அந்தக் காடு முழுவதும் பறந்து சென்று அதைத் தேடியது. கடைசியில் பயிர்க் கொல்லைக்கு வந்து அது வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் பரிதாபக் காட்சியைக் கண்டது.
‘அறிவுள்ள மான் குட்டியே, நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?' என்று காகம் கேட்டது.
'காக்கையண்ணா, எல்லாம் நீங்கள் சொன்ன பேச்சைக் கேளாததால் வந்த பிழைதான்!' என்று துயரத்தோடு கூறியது மான்.
'நண்பர் நரியார் எங்கே காணோம்?’ என்று காகம் கேட்டது.
‘என் இறைச்சியைத் தின்பதற்காக இங்கேப் பக்கத்தில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது' என்று மான் குட்டி கூறியது.
அப்போது வலை போட்ட கொல்லைக்காரன் வந்து கொண்டிருந்தான். காகம் உடனே மானைப் பார்த்து, 'இதோ, கொல்லைக்காரன் வருகிறான். நான் சொல்லுகிறபடி கேள். செத்துப் போனது போல் படுத்துக்கொள்’ என்றது. உடனே மான் குட்டி அவ்வாறே செத்த பிணம் போல் கிடந்தது.
பயிர்க் கொல்லைக்காரன் வந்து பார்த்து விட்டு இந்த மான் செத்துப் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டு வலையைச் சுருட்டிக் கட்டினான். அவன் வலையைச் சுருட்டிக் கட்டிக் கொண்டிருக்கும் போது, ‘இப்போதே ஓடிவிடு’ என்று கத்தியது காகம், மான் குட்டியும் சட்டென்று துள்ளிப் பாய்ந்து ஓடியது.
‘என்னையே இந்தச் சின்ன மான்குட்டி ஏமாற்றி விட்டு ஓடுகிறதே! என்று கோபம் கொண்ட கொல்லைக்காரன், கையில் இருந்த குறுந்தடியை மான் குட்டி ஓடிய திசையில் வீசினான். மான் அதற்குள் சிட்டாய்ப் பறந்து விட்டது. அவன் வீசிய தடியோ செடி மறைவில் பதுங்கியிருந்த நரியின் மேல் விழுந்து அதைச் சாகடித்து விட்டது.
ஒருவன் செய்கின்ற நன்மையும் தீமையும் அதிகமானால், அதன் பலன் உடனடியாக அவனுக்குக் கிடைத்து விடும் என்ற உண்மை இக்கதையினால் நன்கு விளங்குகிறது.