ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர்.
வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, “எதற்காகச் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“நாங்கள் இருவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். எங்கள் தந்தை ஒரு முனிவர். அவர், மிகச் சிறப்பு வாய்ந்த மூன்று பொருள்களை வைத்துவிட்டு மறைந்துவிட்டார். அவற்றை யார் எடுத்துக் கொள்வது என்ற சச்சரவில் இப்போது ஈடுபட்டு இருக்கிறோம் என்றனர் வாலிபர்கள்.
“அந்த மூன்று பொருள்களும் என்னென்ன?” என்று கேட்டார் வழிப்போக்கர்.
அவை “பாதக்குறடு, கைத்தடி, அமுத சுரபிக் கிண்ணி”, “பாதக் குறட்டை காலில் மாட்டிக் கொண்டு, எங்கேச் செல்ல விரும்பினாலும், உடனே போய்ச் சேரலாம்”
“கைத்தடியால் எதை வரைந்தாலும் அது உடனே உருவம் பெற்றுவிடும்”
“அமுத சுரபிக் கிண்ணத்தில் வேண்டும் போது வேண்டிய உணவு நிறைந்திருக்கும்”
இதுதான் அந்தப் பொருள்களின் சிறப்பு என்று இருவரும் கூறினர்.
அந்தப் பொருள்களின் ரகசியத்தை தெரிந்து கொண்ட வழிப்போக்கர் அவர்கள் இருவருக்கும் ஒரு யோசனை கூறினார்.
இருவரும் ஒரு மைல் தொலைவு ஓடி, எவன் முதலில் வெற்றி அடைகிறானோ, அவனே அந்தப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்” என்றார். அதற்குச் சம்மதித்து இருவரும் ஓட முற்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஓடுகையில், வழிப்போக்கர் பாதக் குறடைகாலில் மாட்டிக் கொண்டு, அமுதசுரபிக் கிண்ணத்தையும், கைத்தடியையும் கையில் எடுத்துக் கொண்டு பறந்து போய் விட்டார்.
சகோதரர்கள் இருவரும் தாங்கள் ஏமாந்து போனதை நினைத்து வருந்தினர்.
பாகப்பிரிவினை என்று சச்சரவு ஏற்படும் போது, சிலவற்றை இழக்க நேரிடும்.