ஒருமுறை இமயமலையில் ஒரு யோகி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண்திறந்து பார்த்தபோது, அங்கு ஒரு கிறித்தவ மடத்தின் தலைமைப் பாதிரியார் அவரைக் காணக் காத்திருந்ததைக் கண்டார்.
ஒரு கிறித்தவ மடாதிபதி, ஒரு யோகி முன்னால் இப்படி வந்து அமர்வது என்பது சாதாரணமாக நிகழும் விசயமல்ல.
அதனால் யோகி, பாதிரியாரைப் பார்த்து, “நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும்?” என்று கேட்டார்.
மனமுடைந்து, பெரும் மன உளைச்சலில் இருந்த அந்தப் பாதிரியார், “நான் உங்களிடம் வந்திருப்பதற்குக் காரணம், என்ன தவறு நடந்ததென்றே எனக்குப் புரியவில்லை. எங்கள் மடாலயம் சில வருடங்கள் முன்பு வரை அற்புதமான இடமாக இருந்தது. அனைவரும் அங்கு வர விழையும் விதத்தில் இருந்தது. ஆனால், இப்போதோ அது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது. எவரும் வர விரும்புவதில்லை. அங்கு இருக்கும் துறவிகளும் உற்சாகமற்று ஆனந்தமின்றி இருக்கிறார்கள். எங்கள் மடாலயம் மீண்டும் உயிரோட்டமானதாக மாற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு யோகி, “நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டீர்கள், அதனால்தான் உங்கள் மடாலயம் நலிந்து கொண்டு வருகிறது. கடவுள் உங்களுக்கு மத்தியில் தோன்றியுள்ளார். உங்களில் ஒருவர்தான் கடவுள், ஆனால், பிறர் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவர் மாறுவேடத்தில் இருக்கிறார். அவரைச் சரியாகக் கவனியுங்கள்” என்றார்.
பாதிரியார் மடாலயத்திற்குச் சென்று இதை அறிவித்தார்.
உடனே அங்கு இருந்த துறவிகள் மத்தியில் பெருத்த பரபரப்பு!
“ஒருவேளை அது சகோதரர் பீட்டராக இருக்குமோ?! ஆனால் அவர் சற்று கோபக்காரர். யாருக்குத் தெரியும், அதுதான் அவர் வேஷமோ!” என்று சகோதரர் ஜான் யோசித்தார்.
சகோதரர் டேவிட், “ஒருவேளை அது நம் சகோதரர் அந்தோனியாக இருக்குமோ?! அவர்தான் மிகவும் பொறுமைசாலி. ஆனால், அவர் சூட்டிப்பாக எதையும் செய்யமாட்டார், ஒருவேளை அதுதான் அவருடைய வேடமோ!” என்று யோசித்தார்.
இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று இப்படி யோசித்து, அனைவரும் அனைவரையும் மிகுந்த மதிப்புடன் நடத்த ஆரம்பித்து விட்டனர். மடாலயம் மீண்டும் தழைத்தோங்கத் துவங்கியது. அனைவரும் அங்கு வர விரும்பும் இடமாக மாறியது.