ரோமாபுரியில் இராணுவத் தளபதியும் அரசியல் தலைவருமான சூலியஸ் சீசர் ஒருமுறை கடற்பயணம் மேற்கொண்டிருந்தார்.
பயணத்தின் போது ஏற்பட்ட திடீர் வானிலை காரணமாக, அவ்வழியில் சுற்றித் திரிந்த கடற்கொள்ளையர்களிடம் எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்டார்.
அவரை யார் என்று அடையாளம் கண்டு கொண்ட கடல் கொள்ளையர்கள் ஒரு குறிப்பிட்டத் தொகையைத் தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சீசர் உயிருடன் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் ஆட்களுக்குத் தகவல் அனுப்பினர்.
அனுப்பப்பட்ட தகவல் பின்பு சீசருக்கு தெரிய வந்த போது கோபம் கொண்டார்.
அந்தத் தகவலில் குறிப்பிட்டுள்ள தொகை மிகவும் குறைந்தது என்றும், தனது உயர்நிலைக்கு அச்சிறுதொகை அவமானம் என்றும் தொகையை அதிகமாகக் கேட்க வேண்டும் என்றும் கொள்ளையர்களிடம் கூறினார்.
அதைக் கேட்ட கொள்ளையர்களோ ஆனந்தமாகத் தொகையை அதிகமாகக் கேட்டுத் தகவல் அனுப்பினர்.
நாட்கள் நகர ஆரம்பித்து.
சீசர் தான் வேலையின்றி அடைபட்டு இருப்பதால் கொள்ளையர்களுடன் நேரம் கழிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதை ஏற்ற கொள்ளையர்கள் தங்களுடன் சீசரை நேரம் செலவிட வைத்தனர்.
சீசர் அவர்களுடன் பழகிய காலத்தில் அவர்களின் அனைத்துக் கடினமான போர் முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் பயின்றார்.
பணத்துடன் தன் நண்பர்கள் வந்து தன்னை மீட்டு விடுவார்கள் என்று எப்போதும் கொள்ளையர்களிடம் கூறியபடியே இருந்தார். அதுமட்டுமல்ல, தான் மீட்கப்பட்டு சென்ற பின் ஒருநாள் மீண்டும் வந்து அதே கொள்ளையர்களிடம் போர் செய்து வெற்றி கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
பின்னாளில் தான் சொன்னதைச் செய்தும் காட்டினார் சீசர்.
ஒரு அவநம்பிக்கையாளர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிரமத்தைக் காண்கிறார்; ஒரு நம்பிக்கையாளர் ஒவ்வொரு சிரமத்திலும் வாய்ப்பைப் பார்க்கிறார்.