தேவர்களின் சபை கூடியிருந்தது.
எப்பொழுதும் மகிழ்வோடு வீற்றிருக்கும் சபைத் தலைவன் தேவேந்திரன் இன்று ஆழ்ந்த சிந்தனையுடனும் கவலையுடனும் காணப்பட்டான்.
“தலைவனுக்கு என்னவாயிற்று? தங்களுக்குத் தெரிந்து இன்று எந்தத் துர்சம்பவமும் நிகழவில்லையே? அப்படியிருக்க, இவன் கவலை எதைப் பற்றியதாக இருக்கும்?” என்ற கேள்வி அங்கு கூடியிருந்தோர் அனைவரின் மனத்திலும் எழ, ஒருவர் எழுந்து, “தேவேந்திரா! படைப்புத்தொழிலை மிகச் சிறப்பாகச் செய்யும் உனக்கு இப்படிக் கவலைப்படும்படி என்ன நேர்ந்தது? அப்படி ஏதேனும் இருந்தால், எங்களிடம் சொல், நாங்கள் உனக்கு உதவுகிறோம்” என்றார்.
தேவேந்திரன் சபையினரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து, “அது அவ்வளவு சுலபமான விசயம் அல்ல. நான் இரவு முழுவதும் தூக்கமின்றி யோசித்து விட்டேன். ஆனால், விடை என்னவோ கிடைப்பதாக இல்லை!” என்றான்.
“அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நாங்களும் உன்னோடு உன் கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்!” என்றனர்.
“மனிதனை நம் போல் தேவர்களாக்கும் அரும்பெரும் இரகசியத்தை அவன் அறியாமல் புதைத்து வைக்க வேண்டும். ஆனால், அதை எங்கே? எப்படி? புதைப்பது என்பதுதான் இப்போதைய குழப்பம்!” என்றான் தேவேந்திரன்.
"அட இவ்வளவு தானா? இதற்குப்போய் இப்படிக் கவலைப்படலாமா? இமயமலை எதற்காக இருக்கிறது? அதன் உச்சி மீது அந்த இரகசியத்தைப் புதைத்து விட்டால் பிரச்சனை முடிந்தது” என்று ஒருவர் சொல்ல, இந்திரன் அதைச் சொன்னவரைக் கேலியாகப் பார்த்து “ஐயா, நீர் எந்த உலகில் இருக்கிறீர்? மனிதன் சந்திர மண்டலத்தின் மீது சவாரி செய்கிறான். அவனுக்கு இமயமலையெல்லாம் ஒரு பொருட்டா? உருப்படியாக ஏதாவது சொல்லுங்கள்...” என்றான் சலிப்பாக.
மற்றொருவர் எழுந்து, “ஏழு கடல்களுக்கு அடியில் அதைப் புதைக்கலாமே! அங்கே மனிதன் எதற்காக, எப்படி? செல்வான்” என்றார்.
இந்திரனுக்கு மீண்டும் கோபம் வந்தது.
“மனிதன் கடலுக்கு அடியில் இருக்கும் தரையையேப் புகைப்படம் எடுக்கிறான். அவன் கண்களுக்கு ஏதாவது தப்பித்தவறிப் போனாலும், புகைப்படம் அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடும் ஐயா!” என்றார்.
இன்னும் ஒருவர் எழுந்தார்.
“நான் இப்போது சரியாகச் சொல்கிறேன். விலங்குகள் - அதாவது கொடிய விலங்குகள் வாழும் குகையில் அதை மறைத்து வைக்கலாம். உயிருக்குப் பயந்து மனிதன் அங்கே வந்து தேடமாட்டான்” என்றார்.
தேவேந்திரனின் கோபம் எல்லையைக் கடந்தது.
“இது என்ன தேவர்களின் சபையா? இல்லை? முட்டாள்களின் கூட்டமா? நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த மனிதன் கொடிய மிருகங்களை எல்லாம் சர்க்கஸில் நடனமாட வைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் என்னவென்றால், அவனுக்கு உயிர் என்றும், பயம் என்றும் அளந்து கொண்டிருக்கிறீர்கள்!” எனப் பொரிந்து தள்ளினான்.
சபையோர் அனைவரும் மெளனமாயினர்.
தேவேந்திரன் கவலை நியாயமானதுதான் எனவும் உணர்ந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு பண்டிதர் எழுந்து, “தேவேந்திரா, இந்த மனிதனைப் பற்றி நீயே அறியாத இரகசியம் ஒன்றுள்ளது. அவன் எப்போதும் வெளியே உள்ள பொருள்களை மட்டுமேப் பார்ப்பவன், சிந்திப்பவன், செயல்படுபவன். என்றுமேத் தனக்குள்ளே என்ன இருக்கிறது என்பதை அவன் பார்க்கவும் மாட்டான், தேடவும் மாட்டான். ஆதலால், நீ எந்த இரகசியத்தை வேண்டுமானாலும் அவனுக்குள் புதைத்து வை. அவன் எக்காலத்திலும் அதைக் கண்டுகொள்ள மாட்டான்” என்றான்.
நிலைகொள்ளாத மகிழ்ச்சியோடு துள்ளியெழுந்து “ஆகா, நீயேச் சிறந்த பண்டிதர், மனிதனைப் பற்றி எவ்வளவு சரியாக, தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாய்! என் கவலை உன்னால் தீர்க்கப்பட்டுவிட்டது” எனக் கூறிய தேவேந்திரன் சத்யம் எனும் ஆன்மாவை அறிந்து கொள்ளும் இரகசியத்தை, பிறப்பு இறப்பு அற்ற உண்மையெனும் ஒளியை மனிதனின் உள்ளே அவன் இதயத்தில் புதைத்து வைத்தான்.
அதை அறியாத மனிதனும் விண் - மண் - காற்று - என ஆராய்ந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.