அனுமனும் விபீஷணனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.
ஒரு நாள் விபீஷணன் அனுமனைப் பார்த்து, “அனுமானே, நீ பிறப்பில் குரங்காக இருந்தாலும், ராம நாமத்தை இடைவிடாது கூறி, ஸ்ரீ ராமனின் கருணையையும் அன்பையும் அதிகமாகப் பெற்றிருக்கிறாய். நீ எத்தகைய பேறு பெற்றவன். நானும் ஸ்ரீ ராமனின் நாமத்தை இடைவிடாது கூறி வருகிறேன். இருந்தாலும், ஸ்ரீ ராமனின் அருளைப் பெறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை...” எனக் கூறினான்.
அனுமன் அவனிடம், “ராம நாமம் சொல்லி வருவது சரியே. ஆனால், ஸ்ரீ ராமனின் காரியங்கள் ஏதாவதொன்றில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டதுண்டா? ஒரு நாளாவது அவரைப் பார்க்கச் சென்று, அவர் படும் துன்பத்தைக் குறைக்க முயற்சி செய்ததுண்டா? உங்கள் அண்ணன் ராவணனால் சிறைப்பட்ட சீதாதேவி இலங்கையில் இருந்தார். அவரை ஒரு முறையாவது போய்ப் பார்த்தீர்களா? நாமத்தைச் சொல்வது மட்டுமேச் செய்து, சேவை எதுவும் செய்யாமல், ஸ்ரீ ராமனின் அருளை எப்படிப் பெற முடியும்?” என்று கேட்டார்.