ஒருவர் தெய்வீகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினார்.
அவர், “தன் ஞானக் கண்களைத் திறக்க என்ன செய்ய வேண்டும்?” என்று யோசித்தார்.
அப்போது அவருக்கு ஒரு குகையில் வசிக்கும் மகானைப் பற்றி அறிந்திருந்ததால், அவரைச் சந்திக்க முடிவு செய்து அங்கு சென்றார்.
குகை இருட்டாக இருந்தது. வெகு தொலைவில் ஒரு விளக்கின் ஒளி மங்கலாகத் தென்பட்டது.
அவர் வெளிச்சத்தை நோக்கிச் சென்ற போது, விளக்கு அணைந்து போய்விட்டது.
அவ்ர் அந்த மையிருட்டுக் குகையில் சிக்கிக் கொண்டார். அந்த இருளில் எல்லோருக்கும் அச்சம் ஏற்பட்டு கடவுளை நினைக்கத் தோன்றும். அவரும் பயத்தில் தன்னை அறியாமல் “ஓம் நமச்சிவாய” என உரக்கக் கூறினார்.
அதைக் கேட்டவுடன் குகையிலிருந்த மகான் அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு, வந்த காரணத்தைச் சொல்லும்படி கூறினார்.
அவர் ஒலி வந்த திசையை நோக்கி, தான் மகானின் அருளைப் பெற வந்ததாகப் பணிவுடன் கூறினார்.
குகையின் சுற்றுப்புறத்துக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்த மகான், வந்திருப்பவரின் தகுதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார். எனவே, அந்த மகான், அவரிடம் அணைந்த தீபத்தை ஏற்றச் சொன்னார். பிறகு, அவரின் கேள்விக்குத் தான் பதிலளிப்பதாகக் கூறினார்.
சாதகர் தீப்பெட்டியிலிருந்த தீக்குச்சிகளை எடுத்துத் தீபத்தை ஏற்ற முயற்சி செய்தார்.
குச்சிகள் தீர்ந்தன. அவரால் விளக்கை ஏற்ற முடியவில்லை.
மகான் அவரைத் தீபத்திலிருக்கும் தண்ணீரைக் கொட்டிவிட்டு, எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றச் சொன்னார்.
இம்முறையும் அவர் தோல்வியுற்றார்.
பிறகு தண்ணீரில் நினைந்திருக்கும் திரியைத் துடைத்துக் காய வைத்து தீபத்தை ஏற்றச் சொன்னார்.
அம்முறை அவர் வெற்றி பெற்றார்.
உடனே அவர் மகானிடம், “தன் ஞானக் கண்ணைத் திறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். மேலும், படிப்பின் முக்கியத்துவத்தைத் தனக்கு எளிய முறையில் விவரிக்குமாறு மகானிடம் வேண்டினார்.
மகான் சொன்னார்:
“உன் இருதயம் என்னும் பாத்திரத்தில் ஜீவன் என்னும் திரி இருக்கிறது. இவ்வளவு காலம் திரியானது ஆசை, மோகம், பொறாமை போன்ற தண்ணீரால் நனைக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஞானம் என்னும் தீபத்தை உன்னால் ஏற்ற முடியவில்லை. ஆசைகள் என்னும் தண்ணீரை இருதயம் என்னும் பாத்திரத்திலிருந்து வெளியேற்றிவிட்டு அன்பால் நனைத்துக் கொள். வாழ்க்கை என்னும் திரியை மன உறுதி என்னும் சூரிய ஒளியில் காய வைத்து, நம்பிக்கையும், பக்தியும் கலந்த எண்ணெய் விட்டு நிரப்பவும். அப்பொழுது தான் உன்னால் ஞான தீபத்தை ஒளி பெறச் செய்ய முடியும்”