சலவைத் தொழில் செய்து வந்த ஒருவன் ஒரு நாயை வளர்த்தான். அந்த நாயும் துணிகள் திருட்டுப் போகாமல் காவல் காத்து வந்தது.
ஒரு நாள் அந்த நாய், துணி திருட வந்த ஒருவனைக் கண்டு குரைத்தது.
சலவைத் தொழிலாளி விழித்துக் கொள்ளவே, திருட வந்தவன் ஓடிப்போய் விட்டான்.
அதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.
சில நாட்களுக்குப் பின்,
வேறொரு திருடன் துணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை.
திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.
சலவைத் தொழிலாளி எழுந்தான்.
அருகில் வைத்திருந்த தடியை எடுத்துக் கொண்டு வந்து, “பகலெல்லாம் உழைத்து, இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொல்லை செய்கிறாயே! இது சரியா?” என்றபடி அதை அடித்து நொறுக்கினான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்தால், இதுபோன்ற விபரீதம்தான் ஏற்படும்.