ஒரு நாள் பொய்யும் மெய்யும் நேரில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
“இன்று ஓர் அற்புதமான நாள் ” என்கிறது மெய்.
மெய் வானத்தை அண்ணாந்து பார்க்கிறது...வானம் உண்மையிலேயே அழகாக இருப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விடுகின்றது. இருவரும் ஒன்றாகப் பல மணி நேரங்களைக் கழிக்கிறார்கள். முடிவில் ஒரு கிணற்றின் பின்பக்கம் வந்து சேருகிறார்கள்.
“கிணற்று நீர் நன்றாக இருக்கின்றது. இருவரும் ஒன்றாக நீராடுவோம்” என்கிறது பொய்.
சந்தேகத்தோடு மெய் கிணற்று நீரை பரிசோதித்துப் பார்க்கின்றது. தண்ணீர் நன்றாகத்தான் இருக்கிறது. பொய் இந்தத் தடவையும் பொய் சொல்லவில்லை. இருவரும் உடையை மாற்றிக் கொண்டு, நீராட ஆரம்பிக்கிறார்கள்.
திடீரென கிணற்றுக்கு வெளியே வரும் பொய், களைந்து வைககப்பட்டிரு்நத மெய்யின் ஆடைகளை அள்ளிக் கொண்டு ஓடுகிறது.
கடுங்கோபத்தோடு கிணற்றை விட்டு வெளியே வரும் மெய், தன் ஆடைகளை மீட்டெடுக்க, எல்லா இடங்களையும் தேடியபடி ஓடுகிறது. மெய்யை நிர்வாணமாகக் கண்டுவிட்ட உலகம், பெருஞ் சீற்றத்துடனும், அருவருப்புடனும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றது.
பாவம் மெய்.. வெட்கம் தாங்கமுடியாமல் கிணற்றுக்குள் ஒரேயடியாக மறைந்து விடுகின்றது.
அன்றிலிருந்து பொய், மெய்யைப் போல அழகாக உடையணிந்து சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.
ஏனென்றால், உலகத்திற்கு அப்பட்டமான உண்மையை எதிர்கொள்ள விருப்பமில்லை