ஒரு கிராமவாசி பல தென்னங்கன்றுகளை நட்டான்.
தனது தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கை அளிப்பதாய் வேண்டிக்கொண்டான்.
மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவன் மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் சேகரித்து, கோணியில் கட்டிக் கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தான்.
போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து “கோணிப் பையில் உள்ளதைக் கொடுத்துவிடு” என்று மிரட்டினான்.
கிராமவாசியோ, “இதில் தேங்காய்கள் உள்ளன. அவை குருவாயூரப்பனுக்குச் சொந்தமானவை” என்று கூறித் தர மறுத்தான்.
கொள்ளைக்காரன் அலட்சியமாக, “குருவாயூரப்பனின் தேங்காய் என்று ஏதாவது இருக்கிறதா? அதற்குக் கொம்புகள் இருக்கிறதா என்ன?” என்று கூறிக் கொண்டே கிராமவாசியின் கைகளில் இருந்து கோணியைப் பற்றி இழுத்தான்.
தேங்காய்கள் வெளியே சிதறின.
அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது.
திருடன் மனம் திருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டு, அந்தக் கிராமவாசியைப் போக விட்டான்.
கிராமவாசியும் தான் வேண்டிக் கொண்டபடியேத் தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான்.