ஒரு மன்னன் தன் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்தான்.
“அமைச்சர் பெருமக்களே, நான் உடனடியாகக் கடவுளைப் பார்த்தாக வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். கடவுள் இருக்குமிடத்தை யார் எனக்குத் தெளிவாகச் சொல்லி, அவரைப் பார்க்க ஏற்பாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் பரிசளிப்பேன்'' என்றான் மன்னன்.
அமைச்சர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர்.
"மன்னருக்கு என்ன ஆயிற்று? திடீரென கடவுளைக் காட்டு என்று சொல்கிறாரே...” என்று தங்களுக்குள் முணுமுணுத்தனர்.
அதைப் பார்த்த மன்னன், "அமைச்சர்களே, உங்களுக்குள் என்ன முணுமுணுப்பு... நீங்கள் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளுங்கள்... அதற்கு மேலும், காலத்தை நீட்டித்தால், உங்கள் உயிர் உங்களுக்கல்ல'' என்று எச்சரிக்கை விடுத்தான்.
அதனைக் கேட்ட அமைச்சர்கள், நாடு முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர்.
ஒரு லட்சம் பொற்காசுகளுக்கு ஆசைப்பட்ட பலர், "கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார், கைலாயத்தில் இருக்கிறார், சூரிய மண்டலத்தில் இருக்கிறார், வேதங்களில் மறைபொருளாக இருக்கிறார்'' என்று எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், யாராலும் கடவுளைக் காட்ட முடியவில்லை.
ஒரு மாதமும் கடந்து விட்டது.
அமைச்சர்கள் அனைவரையும் வரவழைத்த மன்னன், அவர்கள் அனைவரையும் தூக்கில் போடப்போவதாக எச்சரித்தான்.
அப்போது, தானன் என்ற மந்திரியின் ஆறு வயது பெண் குழந்தை தன் தந்தைக்கு வர இருந்த ஆபத்தை அறிந்தாள்.
நேராக மன்னனின் அவைக்குச் சென்றாள்.
“மன்னர் பெருமானே, கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டினால், ஒரு லட்சம் பொன் தருவதாக அறிவித்திருந்தீர்கள், இப்போது, நான் தங்களிடம் ஒன்று கேட்கிறேன்.
கடவுள் இல்லாத இடத்தைக் காட்டுங்கள். என் தந்தையார், உங்கள் அரசுக்கு இரண்டு லட்சம் பொற்காசுகளை அபராதமாகக் கட்டுவார்'' என்றாள்.
மன்னன் விழித்தான்.
"மன்னர் பெருமானே, கடவுள் எங்குமிருக்கிறார் என்ற உண்மையை உணருங்கள். அவர் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்” என்கிறார் நம் அருணகிரிநாதர். கற்றறிந்த அறிஞர்களின் அறிவேக் கடவுள்'' என்றாள்.
மன்னன் சிறுமியின் முன் வெட்கித் தலை குனிந்தான்.