ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான்.
தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையேச் செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான்.
இன்னொரு வேலையாளோ "தானுண்டு தன் வேலையுண்டு” என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமேச் சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர் விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபடுவான். முதலாளியைப் புகழ்ச்சியாக ஒரு நாளும் பாராட்டியதில்லை. எதுவும் பேசாமல் அவர் முன் அடக்கத்துடன் நிற்பான்.
சோம்பேறியின் ஏமாற்றுவேலை எத்தனை நாள் பலித்துவிடும்? உண்மையை அறிந்த முதலாளி, ஒருநாள் சோம்பேறியைத் தோட்ட வேலையில் இருந்து வெளியேற்றினார். நல்லவனை பாராட்டியதோடு, அவனுக்குப் பல பொருட்களைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்.
பூந்தோட்டம் போன்றது தான் இந்த உலகம். இதற்குக் கடவுள் தான் முதலாளி. இங்கே இரு விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஏமாற்றும் குணம் படைத்து, “கடவுளின் புகழ்பாடி பக்தி செய்கிறோம்” என்று சொல்பவர்கள் ஒருபுறம். தன் கடமை அறிந்து உலகிற்குப் பயனுடையவர்களாக வாழவேண்டும் என்ற லட்சியம் கொண்ட உழைப்பாளிகள்
மறுபுறம்.
உண்மையில், உலகின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் உழைப்பாளிகளே கடவுளின் அன்பிற்குரியவர்கள்.