வீணை இசையில் வல்லவர்களான நாரதர் மற்றும் தும்புருவுக்கிடையே, தங்களில் யார் சிறப்பாக வீணை வாசிக்கின்றனர் என்கிற விவாதம் எழுந்தது.
அதற்கான முடிவைச் சிவபெருமானிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருவரும் கைலாயம் நோக்கிச் சென்றனர்.
வழியிலுள்ள ஒரு வனத்தில், ஆஞ்சநேய சுவாமி அமர்ந்து ராம நாமத்தைத் தியானம் செய்து கொண்டிருந்தார்.
அவர் இருவரையும் பார்த்தார்.
"யாழிசை வல்லுநர்களே! நலம்தானா? எங்கே இந்தப் பக்கம்?''என்று விசாரித்தார்.
தாங்கள் எதற்காகச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது பற்றி அவர்கள் விளக்கினார்கள்.
ஆஞ்சநேயர் அவர்களிடம், "அதற்கு ஏன் அவ்வளவு தூரம் செல்கிறீர்கள்? நீங்கள் இருவரும் தனித்தனியே வாசியுங்கள். பிறகு முடிவைச் சொல்கிறேன்'' என்றார்.
அவர்களிருவரும் யாழ் இசைத்தனர்.
பின்னர், ஆஞ்சநேயர் அந்த யாழை வாசித்தார்.
அப்போது, அண்ட சராசரமும் உறைந்து நின்று விட்டது.
நதிகளில் தண்ணீர் ஓடாமல் அப்படியே நின்றது. உலகமே அந்த இசையில் மயங்கி இயக்கம் நின்று விட்டது.
ஆஞ்சநேயர் அமர்ந்திருந்த பாறை உருகி வழிந்தது. நாரதரும், தும்புருவும், அவரது இசைக்கு முன்னால் நம் இசை எம்மாத்திரம்? என்று விக்கித்து நின்றுவிட்டனர்.
ஆஞ்சநேயர் இசையை முடித்ததும், யாழை அந்தப் பாறையில் வைத்தார். உருகி ஓடியிருந்த அந்தப் பாறையில் அது ஒட்டிக்கொண்டது.
"நாரத, தும்புரு முனிவர்களே! நீங்கள் மீண்டும் வாசியுங்கள். யார் இசைக்கு இந்தப்பாறை மீண்டும் இளகுகிறதோ அவர்கள், இப்பாறையில் ஒட்டியுள்ள வீணையை எடுத்துக் கொள்ளலாம். அவரே வெற்றி பெற்றவர்'' என்றார்.
அதன் பிறகும் அவர்கள் போட்டியிடுவார்களா, என்ன?
ஆஞ்சநேயரிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டனர்.