ஜைகீஷவ்யர் என்ற முனிவர் ஆசைகளை முழுமையாகத் துறந்தவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவர். தனக்கு துன்பம் செய்பவர்களையும் மன்னிக்கும் அருங்குணம் கொண்டவர். கோபம் என்ற சொல்லையே அவர் அறிந்ததில்லை. இப்படிப்பட்ட மகாஞானியைச் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மாறுவேடத்தில் சிவலோகம் வந்து தன்னை எந்நேரமும் வந்து தரிசித்துச் செல்ல அனுமதி அளித்தார்.
ஒருமுறை, சிவபெருமானும், பார்வதிதேவியும் "பொருள் என்றால் என்ன?” என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
சிவன் அவளிடம், "இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளும் நானே. நான் அசைந்தால்தான் இந்த அகிலம் அசையும், காற்று, கடல், வான், நெருப்பு, பூமி, மக்கள் எல்லாமே நான் தான்'' என்றதும், பார்வதி கோபித்தாள்.
"சிவனாகிய தாங்கள் தான் ஜீவன் என்றால், சக்தியாகிய எனக்கு இங்கே என்ன வேலை? நான் பொருள் இல்லையா? இல்லை, தாங்கள் என்னை பொருட்படுத்தவே இல்லையா?'' என்றாள் சீற்றத்துடன்.
"தேவி! கோபிக்காதே! என்னுள் அடங்கிய பொருள்களில் நீயும் ஒருத்தி'' என்றார் சிவன்.
அப்போது, ஒரு குரல் கேட்டது.
"சிவன் சொல்வதே உண்மை தேவி! சக்தி என்பது சிவம் என்னும் பொருளில் அடங்கி இருக்கும் ஒரு வஸ்து. சிவத்தினாலேயேச் சக்திக்கு மதிப்பு. உயிரின்றி சக்தி செயல்படாது'' என்றார்.
பார்வதியால் குரலைத் தான் கேட்க முடிந்ததே தவிர, அது யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை.
"லோகநாதரே! நம் பேச்சினூடே குறுக்கிட்டவர் யார்? என்னைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன துணிச்சல்? மனைவியை ஒருவன் விமர்சிக்கும் போது, நீங்களும் அமைதியாக இருந்தீர்களே, சொல்லுங்கள், அது யாரென்று?'' என்று கொந்தளித்தாள்.
சிவன் அவளிடம், "அன்பே! கோபம் கொள்ளாதே. அவர் எனது பக்தர். சிறந்த தபஸ்வி. அவருக்கு ஆசை என்பதே இல்லை. என் பக்தனாயிருப்பதற்குரிய அனைத்துத் தகுதிகளும் அவரிடம் உள்ளன. என்னைத் தரிசிக்க அடிக்கடி வருவார். இப்போது அவர் இங்கு இல்லை. உனக்குரிய பதிலைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவரை நான் தண்டிக்க இயலாது'' என்று பதிலளித்தார்.
"அப்படியா! அந்த முனிவர் ஆசையற்றவர் என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன், கிளம்புங்கள்'' என்றாள் பார்வதி.
இருவரும் ரிஷப வாகனத்தில் அவரது இருப்பிடம் வந்தனர்.
அப்போது, முனிவர் எளிய ஆடையுடன் இருந்தார். இன்னொரு ஆடை கந்தலாய் இருந்தது. அதைத் தைக்க முனிவர் ஊசியில் நூல் கோர்க்க முயன்று கொண்டிருந்தார்.
சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார்.
"முனிவரே! உமக்கு ஏதாவது தர வேண்டுமென விரும்புகிறேன். கேளும்'' என்றார்.
"ஐயனே! நான் மிகுந்த திருப்தியுடன் இருக்கிறேன். எதெல்லாம் எனக்குத் தேவையென நினைக்கிறேனோ, அவையெல்லாம் தந்து விட்டீர். வேறு எதுவும் தேவையில்லை''
"தபஸ்வியே! நீர் வேறு நான் வேறு அல்ல, என்ன வேண்டுமானாலும் கேளும்'' என்று ஆசையைத் தூண்டினார் சிவன்.
ஜைகீஷவ்ய முனிவர் மயங்கவில்லை.
"சரி... இந்த ஊசியில் நூலைக் கோர்த்துத் தந்து விட்டுக் கிளம்புங்கள்'' என்றார்.
ஆசையே இல்லாத அவரைப் பார்த்து மறைந்திருந்த பார்வதி வெளிப்பட்டாள்.
"முனிவரே, தங்களுக்கு எந்த வித ஆசையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உங்களைப் போன்றவர்கள் தெய்வங்களுக்கும் அறிவுரை சொல்லத் தகுதியானவர்கள்தான். சிவத்துக்குள் அடங்கியப் பொருளே சக்தி என்பதை ஒப்புக் கொள்கிறேன்'' என்று அவரை வாழ்த்தி விட்டுக் கிளம்பினாள்.